புதுடெல்லி: டெல்லியில் தமிழக அரசின் சார்பில் 14 (நாளை) மற்றும் 15 ஜனவரி, 2025-ல் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் விழாவிற்கு அக்கட்டிடம் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தயாராகி வருகிறது.
தமிழக அரசின் சார்பில் இந்த பொங்கல் விழா இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஜனவரி 14-ல் 21 பானைகளில் பொங்கலிடும் பெரும் பொங்கல் நிகழ்வு நடைபெறும்.
சாணக்கியபுரி பகுதியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், டெல்லியில் வாழும் தமிழர்கள் திரளாகக் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவை ஒட்டி தமிழக அரசின் நிறுவனங்களின் கண்காட்சியும் அமைக்கப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில், தமிழக அரசின் சார்பிலான நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். இலவச நுழைவிலான இக்கண்காட்சியில் பொதுமக்களுக்கு விற்பனையும் செய்யப்பட உள்ளது.
பூம்புகார் கைவினைப் பொருட்கள், கோ-ஆப்டெக்ஸ் பருத்தி மற்றும் பட்டு துணி வகைகள், ஆவின் பால் பொருட்கள், தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை மருந்துக் கழகம் (டாம்ப்கால்) ஆகியவற்றின் விற்பனையும் உள்ளது.
தமிழ்நாடு டீ நிறுவனம் (TANTEA) & (INDCOSERVE ) ஆகிய கண்காட்சி மற்றும் விற்பனையகங்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன சுயஉதவிக்குழு மற்றும் தமிழ் உணவு அரங்கம் ஆகியவற்றின் விற்பனை அரங்கங்களும் உள்ளன.
மேலும், தமிழக சுற்றுலாத்துறை, ஆயுஷ் சித்த மருத்துவ முகாம், புத்தக அரங்கம், தமிழ்நாடு வனாந்திர அனுபவங்கள் கழகம் (டிரக்), தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை போன்றவற்றின் காட்சி அரங்குகளும் இடம்பெறுகின்றன.
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை, இயல் இசை நாடக மன்றம் மற்றும் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் 105 நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் திறமையை காண்பிக்கின்றனர்.
இக்கலைஞர்கள் சார்பில் நாதஸ்வரம், தவில், பெரிய மேளம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம் , போன்ற இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர்.
பொங்கல் நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளிக்க தமிழக அரசின் உள்ளுறையானையர் ஆஷிஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார். பொங்கல் விழாவினை முன்னிட்டு இன்று ஜனவரி 13-ல் கோலப் போட்டியும் நடத்தப்பட்டது.
இந்த போட்டிக்காக, டெல்லியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வண்ண கோலமிட்டு இருந்தனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களான டாக்டர்.சஞ்சனா நாயர், சத்யா ராமச்சந்திரன், டாக்டர்.சங்கீதா மக்வானா, அனிதா மித்தல், நித்தி சிங் ஆகியோர் இருந்தனர்.
இக்குழுவினர் சார்பில் முதல் மூன்று சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டது. இப்போட்டியின் முதல் பரிசுக்கு ஆர்.சசிகலா , இரண்டாம் பரிசுக்கு தீபா மற்றும் மூன்றாவது பரிசுக்கு ப்ரீத்தி சைனி ஆகியோர் தேர்வானார்கள்.