ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரீய சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராம ராவ் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தெரிவித்துள்ளது. மேலும், ஹரிஸ் ராவ், ஆர்எஸ் பிரவீன் குமார் உள்ளிட்ட கட்சியின் ஏழு உயர்மட்டத் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஆர்எஸ் எம்எல்ஏ பாடி கவுசிக் ரெட்டி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஹைதராபாத்தின் கச்சிபவுலியில் உள்ள கேடிஆரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். முன்னதாக, பார்முலா-இ பந்தையம் தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு (ஏசிபி) தனக்கு எதிராக சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை மறுத்திருந்த கேடிஆர் இது அற்பத்தனமானது, சட்டசெயல்முறைகளை துஷ்பிரயோகம் செய்வது என்று தெரிவித்திருந்தார்.
ஜன.9-ம் தேதி ஏசிபி விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்த கேடிஆர், வழக்கினை நிரூப்பிக்க வலுவான ஆதாரங்கள் இல்லாத நிலையில், என்னிடம் ஏழு மணி நேரம் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய கேடிஆர், “அவர்களிடம் (ஏசிபி) எந்த ஆதாரங்களும் இல்லை. இது ஒரு அற்பமான வழக்கு சட்ட நடைமுறைகளை தவறாக பயன்படுத்துவது என்று நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை 80 முறைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
என் மீதான குற்றச்சாட்டில் ஊழல் எங்கே இருக்கிறது. ஒரு அமைச்சராக, ஹைதராபாத் மற்றும் தெலங்கானாவை உலக அரங்கில் இடம்பெறச் செய்வதற்காக மனசாட்சியுடன் செயல்பட்டுள்ளேன். அதற்காக நீங்கள் என் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்வீர்கள் என்றால், அது முதல்வரின் கொடூரமான மனநிலையே தவிர வேறொன்றுமில்லை.
அவர்கள் என்மீது சட்டவிரோதமாக வழக்கு தொடரப் பார்க்கிறார்கள். அரசுக்கு எதிராக கேள்வி கேட்கும் எந்த ஒரு குரலையும் ஒடுக்கும் முயற்சியாகும். நான் சட்டப்பூர்வமாக போராடி, அனைத்து விதமான சட்ட உதவிகளையும் நாடுவேன். நீதி வெல்லும்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தெலங்கானாவில் கடந்த ஆட்சியின் போது ஹைதராபாத்தில் ஃபார்முலா கார் பந்தயத்தை நடத்துவதற்காக, கேடிஆர் அனுமதி இன்றி ரூ.55 கோடி பணத்தை வெளிநாட்டு நாணயங்களில் செலுத்தியதாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த டிச.26-ம் தேதி வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தது.