பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புவனப்பா லே-அவுட்டில் ஒரு ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியை சேர்ந்த முகமது என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், ஓட்டலில் இருந்த பித்தளை பாத்திரங்கள், தாமிர கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மாயமாகி இருந்தது.
இதையடுத்து, மடிவாளா காவல் நிலையத்தில் ஓட்டலில் இருந்த பொருட்கள் திருட்டுப்போய் இருப்பதாக கூறி உரிமையாளர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஓட்டலில் திருடியதாக மேலாளர் முகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், ஊழியர்கள், தொழிலாளர்கள் இல்லாத போது ஓட்டலில் இருந்த பித்தளை பாத்திரங்கள், தாமிர கம்பிகளை திருடி, சிட்டி மார்க்கெட்டில் உள்ள பழைய இரும்பு கடையில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இரும்பு கடையில் இருந்து ரூ.4½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது. கைதான முகமது மீது மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.