புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. அதிஷி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இருப்பினும் தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தொடர்ந்து 3-வது முறையாக தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 7-ம் தேதி அரசு வாகனத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக முதல்-மந்திரி அதிஷிக்கு எதிராக தேர்தல் நடத்தும் அதிகாரி முதலில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.