புதுடெல்லி: நடைபெற இருக்கும் டெல்லி பேரவைத் தேர்தல் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பல ஆண்டுகள் நிலவிவரும் ஜுகல்பந்தியை அம்பலப்படுத்தும் என்று அர்விந்த் கேஜ்ரிவால் செவ்வாய்க்கிழமை கேலி செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்ன விஷயம் இது… நான் ராகுல் காந்தியைப் பற்றி ஒருவரிதான் சொன்னேன். ஆனால் அதற்கு பாஜகவிடமிருந்து பதில் வருகிறது. பாருங்கள் பாஜக எவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ஒருவேளை, இந்த டெல்லித்தேர்தல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே பல ஆண்டுகளாக திரைமறைவில் நடந்துவரும் ஜுகல்பந்தியை அம்பலப்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார். இத்துடன் பாஜகவின் அமித் மாளவியாவின் பதிவொன்றை இணைத்துள்ளார்.
முன்னதாக, ஊழல் காரணமாக ஆம் ஆத்மி கட்சியை ராகுல் காந்தி சாடியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக எக்ஸில், “ராகுல் காந்தி என் மீது துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஆனால் நான் அவரது கருத்துக்களுக்கு பதிலளிக்கப்போவதில்லை. அவர் காங்கிரஸை காப்பாற்றப் போராடுகிறார். நான் நாட்டைக் காப்பாற்றப் போராடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்காத நிலையில், பாஜகவின் அமித் மாளவியா பதிலளித்துள்ளார். அதில் அவர், “நாட்டைப் பின்னர் காப்பாற்றலாம், முதலில் உங்கள் புது டெல்லி தொகுதியைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று அர்விந்த் கேஜ்ரிவாலை சாடியுள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் இந்த முறையும் களம் காண்கிறார். நான்காவது முறையாகவும் வென்றுவிடலாமென மிகவும் நம்பிக்கையாக உள்ளார். என்றாலும் இந்த முறை அவரை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வெர்மா மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் சந்தீப் திக்ஷித் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் அந்த கட்சியின் முன்னாள் முதல்வர்களின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மீது நேரடி தாக்குதல்: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி, இதுவரை கருத்து முரண்பாடுகள் இருந்த போதிலும் தனிப்பட்டமுறையில் காங்கிரஸ் கட்சியைத் தாக்கியது இல்லை. ஆனால், திங்கள்கிழமை நடந்த ஜெய் பீம் ஜெய் சம்விதான் நிகழ்வில், ஆம் ஆத்மி கட்சியை ஊழல் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், தனது எக்ஸ் பக்கத்தில், நரேந்திர மோடி, ஒன்றன்பின் ஒன்றாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பிரச்சாரம் செய்வது போல் இப்போது அர்விந்த் கேஜ்ரிவாலும் அதே உத்தியை பின்பற்றுவது போல உள்ளது. இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இண்டியா கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கருத்து நிலவி வரும் நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.