மகாராஷ்டிராவில் லாரி மீது டெம்போ வாகனம் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டம் துவாரகா சர்க்கிள் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஒரு லாரி இரும்பு கம்பிகளை ஏற்றிச்சென்றது. இந்நிலையில் அதன் பின்னால் டெம்போ வாகனம் ஒன்று அதிக வேகத்தில் மோதியது.
டெம்போ வாகனத்தில் 16 பயணிகள் இருந்தனர். இவர்கள் நிபாத் பகுதியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு துவாரகா சர்க்கிள் பகுதியில் உள்ள சிட்கோ பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் டெம்போ ஓட்டுநர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தை தொடர்ந்து போலீஸார், தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ந்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்த சிலரையும் சேர்த்து மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.