வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு வட்டம் அடுத்த ஒடுகத்தூர் பகுதியில் எறும்பு தின்னியை ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்ட வனத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து ஒடுகத்தூர் வனச்சரக அலுவலகத்திற்கு எறும்பு தின்னியை விற்க முயற்சிக்கும் கும்பல் குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த கும்பலை பிடிக்க ஒடுகத்தூர் வனச்சரகர் இந்து தலைமையிலான குழு, பொதுமக்களை போன்று அந்த கும்பலிடம் எறும்பு தின்னியை விலைக்கு வாங்குவது போன்று விலை பேசி வந்துள்ளனர்.
எறும்பு தின்னி என்பது அலங்கு என்னும் பெயரில் அழைக்கபடுகிறது. இது பாலூட்டி வகையை சேர்ந்த உயிரினமாகும். இந்த உயிரினம் பேங்கோலின் (Pangolin) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உயிரினம் அழியும் நிலையில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாகும். தொடர்ந்து மூன்று நாட்களாக அவர்களுடன் தொடர்பு கொண்டு எறும்பு தின்னியை விலைக்கு வாங்குவது போன்று விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி அந்த கும்பல் இவர்களிடம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்க முன்வந்தனர்.
அந்த கும்பல் இவர்களை அணைக்கட்டு வட்டம் அடுத்த ஓராஜாபாளையம் அருகிலுள்ள ஒரு கடைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு ஒடுகத்தூர் வனச்சரகர் இந்து தலைமையிலான குழு அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். முதல் கட்டமாக மூன்று பேரை கைது செய்தனர். அதன் பிறகு அங்கு விற்பனைக்காக கூண்டில் வைக்கப்பட்டிருந்த 8 கிலோ எடை கொண்ட எறும்பு தின்னியை உயிருடன் கைப்பற்றினர்.
முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் அவர்கள் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த ராம்ராஜ் (வயது 36), கஜேந்திரன் (வயது 62), வேணுகோபால் (வயது 46) என தெரிய வந்தது. அந்த மூன்று பேரும் திருவண்ணாமலை அருகிலுள்ள கீழ் முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி என்பவரிடம் இருந்துதான் இந்த எறும்பு தின்னியை பெற்று விற்க முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்தது. அதன் பிறகு முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலை கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்த மணி என்பவரை வலை வீசி தேடி வந்தனர் வனத்துறையினர். இந்த நிலையில் தற்போது அவரையும் அவருடன் தொடர்புடைய இரண்டு பேரையும் கைது செய்து கோர்ட்டில் வனத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வனசரக அலுவலகத்தில் கேட்ட பொழுது, “எறும்பு தின்னி இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்று. அவை சில மருத்துவ காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது தெரிய வருகிறது. ஆனால் அதில் உள்ள உண்மை தன்மை பற்றி அறியப்படவில்லை. மக்கள் அறியாமையினாலே இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது வேலூரில் ஒடுகத்தூர் பகுதியில் எறும்பு தின்னியை விற்க முயன்ற 6 பேரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்துள்ளோம்.” என்றனர்.