புதுடெல்லி: இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் “தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது. எந்தவொரு ஜனநாயக நாட்டைப் பற்றிய தவறான தகவலும் அதன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். இந்தத் தவறுக்காக மெட்டா நிறுவனம் இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாட்காஸ்ட் ஒன்றில் கலந்து கொண்ட மெட்டா சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் பேசும்போது, உலகம் முழுவதும் 2024 மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்ததாகவும், இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் ஆளுங்கட்சிகள் தேர்தலில் தோல்வி அடைந்ததாகவும் தவறாக தெரிவித்தார்.
முன்னதாக அவரது இந்த கருத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்திருந்தார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியதாவது: “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 2024 தேர்தலை 64 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
2024 தேர்தல்களில் இந்தியா உட்பட பெரும்பாலான தற்போதைய அரசாங்கங்கள் கோவிட்-க்குப் பிறகு தோல்வியடைந்ததாக ஜூக்கர்பெர்க் கூறியது உண்மைக்கு புறம்பானது.
80 கோடி மக்களுக்கு இலவச உணவு, இலவச தடுப்பூசிகள் மற்றும் கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு உதவி செய்ததில் இருந்து, இந்தியாவை வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக வழிநடத்துவது வரை, பிரதமர் மோடியின் தீர்க்கமான 3-வது முறை வெற்றி, அவரது நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்” இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.