குடிசைப் பகுதி மக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றால் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு அர்விந்த் கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, டெல்லியின் ஷகுர் பஸ்தி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் சத்யேந்தர் ஜெயினை ஆதரித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நேற்று முன்தினம் வாக்கு சேகரித்தார். பின்னர் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு ஷகுர் பஸ்தி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை இடிக்க மத்திய அரசு புல்டோசர்களை அனுப்பி வைத்தது. இந்த முயற்சியை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். இப்பகுதி மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அவர்களுடைய சகோதரரைப் போல நான் உதவுகிறேன்.
குடிசைப் பகுதி மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். குடிசைவாழ் மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட அதே இடத்தில் வீடு கட்டித் தரப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இதை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா செய்துவிட்டால் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இதை ஒரு சவாலாக விடுக்கிறேன்.
குடிசைப் பகுதி மக்கள் நலனைவிட, நிலங்களை கையகப்படுத்துவதற்குத்தான் மத்திய அரசு முன்னுரிமை வழங்குகிறது. தேர்தலுக்குப் பிறகு குடிசைப் பகுதி மக்களை அவர்களின் வசிப்பிடத்திலிருந்து அகற்றுவதற்காகத்தான் பாஜக வாக்கு கேட்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.