டெல்லி முதல்வர் ஆதிஷி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இணையவழியில் நன்கொடை திரட்டுகிறார். அவருக்கு 24 மணி நேரத்தில் ரூ.19 லட்சம் குவிந்தது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் ஆதிஷி போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்துக்காக ரூ.40 லட்சம் நன்கொடை வசூலிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, இணையவழியில் நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். அடுத்த 24 மணி நேரத்தில் 455 பேர் ரூ.19,32,728 நன்கொடை வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே அமோக ஆதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சியின் தூய்மையான, நேர்மையான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது” என பதிவிட்டுள்ளார். ஆதிஷியை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.