அரூர்: ஃபெஞ்சல் புயல் மழையின்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் சிட்லிங் ஊராட்சி கம்பாலை கிராமத்துக்கு செல்லும் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் கடந்த 2 மாதமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக மாற்றுப்பாதை அமைத்தத் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிட்லிங் ஊராட்சியில் கத்திரிப்பட்டி, கம்பாலை, நட்டவளவு, நடுயூர் ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் கம்பாலை கிராமத்துக்கு செல்லும் வழியில் காட்டாறு செல்கிறது. கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் ஆற்றைக் கடந்து தான் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையின்போது காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், கிராமங்களுக்குச் செல்லும் சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்குச் செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் நிலம் வழியாக சென்று வந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர் பாதையை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பாலை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கல்லாற்றில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தொடங்கியது. தொடர்மழையால் பாலம் பணியும் நின்று விட்டது. சாலை வசதி இல்லாதது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து இப்பகுதி பெண்கள் கூறியதாவது: சாலை வசதியின்றி கடந்த 2 மாதமாக பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். ஆற்றில் பாலம் கட்டும் பணி நின்று விட்டது. பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாத முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளதால் அறுவடை பருவத்தில் உள்ள மரவள்ளிக்கிழங்குகளை அறுவடை செய்ய முடியாமல் அழுகும் நிழை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கத்திரிப்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருள் வாங்க செல்ல வேண்டும். அங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் குலதெய்வமான முனியப்பன் கோயிலுக்கு பொங்கலையொட்டி விழா நடத்துவது வழக்கம்.
தற்போது சாலை இல்லாததால் பொங்கல் விழா நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, கம்பாலை கிராமத்துக்கு சாலை வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும். பாலம் கட்டுமானப் பணி முடியும் வரை தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.