Jallikattu 2025: ஜல்லிக்கட்டுக்குள் இறங்கும் பாடி பில்டர்; போர்க்குணம் கொண்ட புலிக்குளம் காளைகள்

அறிமுகமில்லாதவர்கள் அருகே நெருங்கினால் புலி போல உறுமும்… புலியையே தன் கொம்பால் குத்தி வீசி விடும். அந்தளவுக்கு கூர்மையான கொம்புகளைக்கொண்ட காளை. போர்க்குணம் கொண்டது; ஏறு தழுவலுக்கு ஏற்றது.

ஒரு பாடி பில்டரைபோல கட்டுக்கோப்பான உடலமைப்புகொண்டது. ஜல்லிக்கட்டில் களம் இறங்குகிற காளைகளில் 99 சதவிகிதம் இந்த இன காளைகள்தான். அவைதாம் புலிக்குளம் மாடுகள். ’புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவ’ரான டாக்டர் சரவண ஜெயம், இந்த மாட்டின் அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகிறார்.

புலிக்குளம் காளை

’’சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிற புலிக்குளம் என்ற கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாட்டினம் இது. தவிர, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த மாட்டினம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஏறு தழுவுவதற்காகவே வளர்க்கப்படுகிற மாட்டினங்களில் முக்கியமான இனம் புலிக்குளம் மாடுகள். புலிக்குளம் மாட்டை ஏன் ஜல்லிக்கட்டுக்கு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்றால், இதனுடைய உயரம் நான்கரை அடி வரைக்கும்தான் இருக்கும். ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது ஜல்லிக்கட்டு வீரர்கள் புலிக்குளம் மாட்டின் திமிலை தழுவுவதற்கு அதாவது பிடிப்பதற்கு இதன் உயரம் மிகச் சரியாக இருக்கும்.

இதன் கழுத்துப் பகுதி செழுமையும் வலிமையுமாக இருக்கும். கால்கள் சற்று குட்டையாக இருக்கும். 250 கிலோவில் இருந்து 300 கிலோ வரை எடை இருக்கும். உடல் அமைப்பு கட்டுக்கோப்பாக இருக்கும். போர்க்குணமும் மூர்க்கத்தனமும் கொண்டவை என்பதால், அவற்றை பராமரிப்பவர்களால் மட்டுமே நெருங்க முடியும். வேறு யாராவது நெருங்கினால் புலி போலவே உறுமும். அதனால்தான் இந்த மாட்டுகளுக்கு புலிக்குளம் மாடுகள் என்று பெயர் வந்ததாம்.

புலிக்குளம் காளை

வழக்கமான பருத்திக்கொட்டை மற்றும் புண்ணாக்குடன், பேரீச்சம்பழம், நாட்டுக்கோழி முட்டை, பாதாம், பிஸ்தா, முளைக்கட்டிய பயறு வகைகள் என்று புரதச்சத்து நிரம்பிய உணவுகளை அரைத்துக் கொடுப்பார்கள். கூடவே வெல்லமும் கொடுப்பார்கள். ஜல்லிக்கட்டில் இறங்கும் புலிக்குளம் காளையின் உடல் கட்டுக்கோப்புக்கும் எனர்ஜிக்கும் இந்த உணவுகள்தாம் அடிப்படை.

ஜல்லிக்கட்டுக்குச் செல்லும் காளைகளுக்கு காலை ஒரு மணி நேரம் மாலை ஒரு மணி நேரம் என நடைப்பயிற்சி, ஓடும் பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிப்பார்கள். தலையைக் குனிந்து கொம்பால் மண்ணைக் குத்தி அள்ளி மேலே வீசும் இல்லையா… அது இந்த மாட்டில் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு குணாதிசயம். ஜல்லிக்கட்டு வீரர்கள் புலிக்குளம் மாட்டை பிடிக்க வரும்போது அவர்களை முட்டிமேலே தூக்கி இப்படித்தான் வீசும். ஒரு பாடி பில்டரை ஜிம்மில் ஒரு டிரெயினர் எப்படி உருவாக்குவாரோ அதேபோல்தான் ஜல்லிக்கட்டு காளையை உருவாக்குவார்கள்.

தவிர, வாடிவாசல் போலவே ஒரு அமைப்பை ஏற்படுத்தி எப்படி சீறிப் பாய வேண்டும்; எப்படி மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் பாய வேண்டும் என்பதையும் அதுபோன்ற வீரர்களை வைத்தே பயிற்சி அளிப்பார்கள்.

புலிக்குளம் காளை

புலிக்குளம் மாட்டை ஆறு மாத கன்றுக்குட்டியாக இருக்கும்போதே ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இரண்டு, மூன்று வயதாகிவிட்டால் ஜல்லிக்கட்டுக்குத் தயார் செய்யமுடியாது. ஆறு மாதத்திலிருந்து பயிற்சியளிக்க ஆரம்பித்தால், இரண்டரை அல்லது மூன்று வயதில் ஜல்லிக்கட்டில் இறக்குவார்கள். ஜல்லிக்கட்டுக்குச் செல்வதற்கு முன்னால் ஜல்லிக்கட்டு விதிகளின்படி காளை ஃபிட்டாக இருக்கிறதா என்பதை கால்நடை மருத்துவரிடம் உறுதிசெய்து மாட்டுக்கு ஃபிட்னஸ் சர்டிபிகேட் வாங்கவேண்டும். காளையின் உடல் எடை, உயரம் ஜல்லிக்கட்டு விதிகளின்படி இருக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் இருக்கிற மருத்துவக்குழுதான் இந்தச் சான்றிதழை வழங்கும். இந்தச் சான்றிதழ் இருந்தால்தான் அந்த மாடு ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவேமுடியும்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட புலிக்குளம் மாட்டுக்கு அரசு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலை நிர்ணயித்துள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் இரண்டு, இரண்டரை வயதுள்ள புலிக்குளம் காளைகள் ஒரு லட்சம்கூட விலைபோகும்.

புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமான மீத்தேன், கலப்பின மாடுகளின் சாணத்தில் இருப்பதைவிட நாட்டு மாடான புலிக்குளம் மாட்டின் சாணத்தில் குறைவாக இருக்கும். புலிக்குளம் மாட்டின் வயிற்றுப்பகுதியில் இருக்கிற நுண்ணுயிர்களும் கலப்பின மாடுகளின் வயிற்றில் இருக்கிற நுண்ணுயிர்களும் வேறுவேறாக இருக்கின்றன. புலிக்குளம் மாட்டின் சாணத்தில் மீத்தேன் உமிழ்வு குறைவாக இருப்பதற்குக் காரணம் இந்த நுண்ணுயிர்கள்தான்.

டாக்டர் சரவண ஜெயம்

இரண்டு வருடங்களுக்கு முன்னால் அழிந்து வருகிற மாட்டினங்களில் புலிக்குளம் மாடும் ஒன்று என இந்திய அரசாங்கம் அறிவித்தது. புலிக்குளம் மாட்டினத்தை பாதுகாப்பதும் அதை இனப்பெருக்கம் செய்து மக்களுக்கு அளிப்பதும்தான் எங்கள் ஆராய்ச்சி மையத்தின் முக்கியமான பணி’’ என்கிறார் டாக்டர் சரவண ஜெயம்.

VIKATAN PLAY EXCLUSIVE AUDIO STORIES:

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.