பட்டய கணக்காளர் (சிஏ) மற்றும் ஹவாலா ஆபரேட்டர்கள் இணைந்து ரூ.10,000 கோடி கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது அமலாக்கத் துறை (இடி) சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறும்போது: ஜனவரி 2-ம் தேதி தாணே, மும்பை, வாராணசி பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றை சோதனைக்கு உட்படுத்தியதில் சிஏ மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் கூட்டணி அமைத்து கருப்பு பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அவர்கள் ரூ.10,000 கோடி ரூபாய் அளவிலான கருப்பு பணத்தை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, ஜிதேந்திர பாண்டே என்பவர் மூளையாக செயல்பட்டுள்ளார். அவரது பெயரில் 98 போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு 269 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் வழியாக சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு கருப்பு பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் பெயரில் இந்த தொகை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கருப்பு பண மோசடி குற்றவாளிகளுக்கு பல பட்டய கணக்காளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக தாணே காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன் அடிப்படையில் இடி விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்வாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.