அமெரிக்காவிலும் கடையை மூடும் டிக்டாக்… அமலுக்கு வரும் தடை உத்தரவு – முழு பின்னணி

Tiktok Ban In America: சீனாவின் டிக்டாக் செயலி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பிரபலமான இந்த செயலி சீனாவில் அறிமுகமானாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் தேசப்பாதுகாப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த பிரச்னைகளை காரணம் காட்டி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. 

இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், ஈரோன், நேபாள், சோமாலியா, கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் டிக்டாக் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாடுகளில் டிக்டாக் செயலிக்கு கடும் கட்டுபாடுகளும் நிலவி வருகின்றன. எப்போது டிக்டாக் செயலியை சுற்றி பரபரப்பான செய்திகளும், தகவல்களும் வலம் வந்துகொண்டிருக்கும். அப்படியிருக்க, தற்போது வெளியாகியிருக்கும் தகவல் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது எனலாம்.

டிக்டாக் தடை?

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சட்டம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதாவது, டிக்டாக்கின் தாய் நிறுவனமான ByteDance அதன் அமெரிக்கா சார்ந்த உரிமம் அனைத்தையும் 2025ஆம் ஆண்டு ஜன. 19ஆம் தேதிக்குள் விற்க வேண்டும் அல்லது நாடு முழுக்க டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்பதே அந்த சட்டத்தின் முக்கிய சாராம்சம்.

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவிலும் ஏராளமான பயனர்கள் இருக்கிறார்கள். அப்படியிருக்க, டிக்டாக் செயலி அதன் சேவையை வரும் ஞாயிற்றுக்கிழமையோடு (ஜன. 19) அமெரிக்காவில் நிறுத்திக்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டிக்டாக் செயலி மீது அரசின் தடை அமலுக்கு வர உள்ள நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு, தடையை தடுக்கும் விதத்தில் உத்தரவிட்டால் மட்டுமே டிக்டாக் சேவை நிறுத்தப்படாது என கூறப்படுகிறது.

பதிலளிக்காத டிக்டாக்

ஒருவேளை டிக்டாக் அதன் சேவையை அமெரிக்காவில் நிறுத்திக்கொண்டாலும் பயனர்கள் அமெரிக்காவில் அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த தடையானது, டிக்டாக் செயலியை Play Store அல்லது  Apple Store ஆகியவற்றில் இருந்து தரவிறக்கம் செய்ய இயலாது, தற்போது அதனை பயன்படுத்தி வரும் பயனர்கள் தொடர்ந்து இன்னும் சில காலத்திற்கு பயன்படுத்தலாம்.

மேலும் இதுகுறித்து டிக்டாக் அதன் பயனர்களுக்கும் நோட்டிபிக்கேஷன் மூலம் தகவல் அளித்து வருவதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி, பயனர்கள் தங்கள் சார்ந்த அனைத்து வீடியோக்கள், தரவுக்களையும் தரவிறக்கம் செய்யவும் டிக்டாக் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து டிக்டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான சீனாவின் ByteDance ஆகியவை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

சட்ட ரீதியாக சந்திக்கும் டிக்டாக்

இருப்பினும், அமெரிக்காவின் இந்த சட்டம் அமலாவதை தடுக்க டிக்டாக் நிறுவனம் சட்ட ரீதியாக வாதாடி வருகிறது. அரசின் இந்த சட்டம் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டத்திருத்தம் வழங்கும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக அமைந்துள்ளதாக டிக்டாக் நிறுவனம் வாதாடுகிறது. இந்த சட்டம் ஒரு மாதம் அமலுக்கு வந்தாலே, டிக்டாக்கின் மொத்த பயனர்களில் அதாவது 170 மில்லியன் பயனர்களில் மூன்றில் பாதியினர் (சுமார் 57 மில்லியன்) டிக்டாக் செயலியை கைவிட்டுவிடுவார்கள் என்றும் இது பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகவும் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.