புதுடெல்லி: தனக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்த உளவுத்துறையின் தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், ‘கடவுள் என்னைக் காப்பாற்றுவார்’என்று தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்யின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், புதுடெல்லி தொகுதி வேட்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தனது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்கிறார். முன்னதாக அவர் தனது மனைவியுடன் கன்னாட் பிளேஸில் உள்ள பிரச்சீன் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் உளவுத்துறையின் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கேஜ்ரிவால் “கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உளவுத்துறையானது டெல்லி பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
இதனிடையே, டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி வழங்கியிருந்த நிலையில் உள்துறை அமைச்சகம் இந்த இசைவினைத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆர்பிசி), அரசின் முன் அனுமதி பெறாமல், அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. முன்பு, அரசு ஊழியர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குத் தொடர்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. அவை சிபிஐ மற்றும் மாநில காவல் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கே கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பின்படி கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.