வருடாந்திர ராணுவ செய்தியாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர த்விவேதி (Upendra Dwivedi), “பெண் அதிகாரிகள் ராணுவத்தில் மிக சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்திய ராணுவம் எதிர்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் அதிகாரிகளை நியமிக்க உள்ளது. காளி தாயை போன்ற வலிமையான பெண் அதிகாரிகள் இந்திய ராணுவத்துக்கு வேண்டும். பெண்களை சாதாரண ராணுவ வீரர்களாக நியமிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்” என கூறினார்.
மேலும் பேசிய த்விவேதி, “ராணுவத்தில் தற்போது 115 பெண் அதிகாரிகள் கமாண்ட் யூனிட்டில் பணியாற்றுகின்றனர்.18 பேர் கமாண்ட் யூனிட்டில் சேர தயார் நிலையில் உள்ளனர். பெண் அதிகாரிகளை பல துறைகளிலும் கண்ட நேரடி அனுபவம் எனக்கு உள்ளது. எங்கு பார்த்தாலும் பெண் அதிகாரிகள் மிக பக்குவமாகவும் மிக அக்கறையோடும் அன்பானவர்களாகவும் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
பைலட்களாக பெண் அதிகாரிகள் உள்ளனர். சுமார் 1700 பெண்கள் தற்போது ராணுவப் பள்ளிகளில் மருத்துவப்பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள் இந்திய ராணுவம் மற்றும் முப்படைகளில் சேவை செய்யவிருக்கிறார்கள். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். பாலின நடுநிலைமை நோக்கி சமூகத்தையும் ராணுவத்தையும் தயார்ப்படுத்த வேண்டும்”என உணர்வெழுச்சியுடன் கூறினார்.
தவிர, ராணுவத்தில் சேவை புரிந்த பெண் கர்னல் போனுங் டோமிங் (Ponung Doming)கை பற்றிப் பேசுகையில், ’’போனுங் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் கடினமான சாலைகளில், நிலத்தடி குகைகளில் பணிபுரிந்திருக்கிறார். மிக உயரமான எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் இருந்த படையின் கமாண்டராக இருந்த முதல் பெண் அதிகாரி அவர்’’ என பாராட்டினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…