3-ம் ஆண்டு ‘காசி தமிழ் சங்கமம்’ – ஒருங்கிணைப்பு பணியில் சென்னை ஐஐடி

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ் சங்கமம்’ 3-வது ஆண்டு நிகழ்வை பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டுக்கும் வாரணாசிக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தும் வகையில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 24 வரை காசி தமிழ் சங்கமம் நடைபெறுகிறது. இதன் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ முழக்கத்தை வலியுறுத்தவும் இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்களுக்கு இடையிலான கலாச்சார தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.

இந்நிகழ்வில் பங்கேற்போருக்காக ஐந்து பிரிவுகளில் விண்ணப்பங்கள், http://kashitamil.iitm.ac.in. என்ற இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இந்நிகழ்வுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University – BHU) வரவேற்புக் கல்வி நிறுவனமாக செயல்படும்.

இந்த நிகழ்வில் தமிழகத்தின் பங்கேற்பு குறித்து விரிவாக எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “தமிழ்நாட்டில் இருந்து ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சம எண்ணிக்கையில மொத்தம் 1,000 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வேளாண் விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் பெண்களும், ஆராய்ச்சியாளர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்தும் 200 தமிழ் மாணவ-மாணவிகளைக் கொண்ட குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்று வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற இடங்களை உள்ளூர் அளவில் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, 2025 ஜனவரி 13-ந் தேதி முதல் பிப்ரவரி 26-ந் தேதி வரை நடைபெறும் மகா கும்பமேளாவுடன் இணைந்து இந்நிகழ்வு நடைபெறவிருக்கிறது. காசி தமிழ் சங்கமத்தின் பிரதிநிதிகள் மகா கும்பமேளாவில் ‘ஷாஹி ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடல் வாய்ப்பைப் பெறுவதுடன், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலிலும் தரிசனம் செய்யவிருக்கின்றனர்.

சித்த மருத்துவ முறை (பாரதிய மருத்துவ முறை), பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாச்சார ஒற்றுமைக்கு அகத்தியர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துக்காட்டுவதுதான் காசி தமிழ் சங்கமத்தின் இந்த ஆண்டுக்கான முக்கிய கருப்பொருளாகும்.

அகத்தியர் என்ற ஆளுமையின் பல்வேறு சிறப்பு அம்சங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், கலாச்சாரம், கலை, குறிப்பாக தமிழ் மற்றும் தமிழ்நாட்டிற்கு அகத்தியர் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பற்றிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வின்போது, இத்தலைப்புகளில் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாரணாசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உயிரோட்டமான பிணைப்புகளை மீட்டெடுக்கும் வகையில் அரசு சார்பிலான அணுகுமுறையாக, 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை ஒரு மாத காலத்திற்கு முதலாவது காசி தமிழ் சங்கமம் நடைபெற்றது. 2023 டிசம்பர் 17 முதல் டிசம்பர் 30 வரை இதன் இரண்டாவது நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தமிழ்நாடு, உத்தரப் பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், தற்போது மூன்றாவது நிகழ்வுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பங்கேற்பாளர்கள், தமிழ்க்கவி சுப்ரமணிய பாரதியாரின் பழங்காலத்து இல்லம், கேதார் காட், காசி மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிடுவதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து தமிழ்த் துறையில் கல்வி- இலக்கியம் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.