விந்து முந்துதல் அளவுக்குக்கூட வெளியில் சொல்ல முடியாத ஆண்களுடைய ஒரு பிரச்னை வளைந்த ஆணுறுப்பு. கிட்டத்தட்ட சம வயதுள்ள ஆண்கள் இருவர் என்னை சந்திக்க வந்திருந்தனர். அதில் ஒருவருக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம். அது தொடர்பான ஒரு சந்தேகத்திற்கு தீர்வு தேடி தான் என்னை சந்திக்க வந்திருந்தார்கள். திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள ஆணுடைய அந்தரங்க உறுப்பு வளைவாக இருக்கிறது என்றும், அதனால் திருமணத்துக்குப்பிறகு தாம்பத்திய உறவில் ஏதேனும் பிரச்னை வருமா என்றும் கேட்பதற்காக என்னை சந்திக்க வந்திருந்தார்கள்.
அவரை பரிசோதனை செய்துபார்த்ததில் ஆணுறுப்பு லேசாகத்தான் வளைந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடிந்தது. உண்மையில் ஆணுறுப்பு லேசாகத்தான் வளைந்திருக்கிறது என்றால், உள்ளாடை அணியும்போது ஆணுறுப்பு எந்தப் பக்கமாக வளைந்திருக்கிறதோ அதற்கு எதிர்ப்பக்கமாக ஆணுறுப்பை ஒதுக்கி வைத்து உள்ளாடை அணிந்து வந்தாலே சிறிது காலத்தில் அந்த வளைவு சரியாவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அந்த ஆணுக்கும் இந்தத் தீர்வைத்தான் சொல்லி அனுப்பினேன்.
உண்மையில் அந்த ஆணையும் அவரை என்னிடம் அழைத்து வந்த அவருடைய நண்பரையும் பாராட்ட வேண்டும். தன்னிடம் ஒரு பிரச்னை இருக்கிறது. அதனால், தன்னுடைய தாம்பத்திய வாழ்வில் சிக்கல் வந்து விடுமோ; இதனால் வருங்கால மனைவிக்கும் தான் மனக்கஷ்டம் தந்து விடுவோமோ என்று யோசித்து ஒரு பாலியல் மருத்துவரை நாடுவது என்பது ஆரோக்கியமான விஷயம். அந்த ஆணுக்கு வளைவு லேசாக இருப்பதால், தாம்பத்திய உறவு கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. விறைப்புத்தன்மை அடையும்போதும் வலி ஏற்படாது. இது ஆண்மைகுறைபாடும் அல்ல என்பதையும் தெளிவாக எடுத்துச்சொன்னேன். தனக்கு இருக்கிற பிரச்னையால் தன்னுடைய வருங்கால மனைவிக்கு ஆர்கஸம் ஏற்படாமல் போய்விடுமோ என்கிற சந்தேகத்தையும் கேட்டார். இது லேசான வளைவுதான் என்பதால் அப்படி எதுவும் நிகழாது என்று வாழ்த்துச் சொல்லி அனுப்பி வைத்தேன்.
நிறைய ஆண்கள் ஆணுறுப்பு என்பது நேராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அது கிடையாது. ஆணுறுப்பானது மேல் நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ அல்லது வலது பக்கமாகவோ அல்லது இடது பக்கமாகவோ லேசாக வளைந்துதான் இருக்கும். இதனால் தாம்பத்திய உறவு கொள்வதில் எந்த பிரச்னையும் வராது. ஆனால், ஒரு சிலருக்கு ஆங்கில எழுத்து ‘L’ மாதிரியோ அல்லது ‘S’ மாதிரியோ வளைந்து இருக்கும். அந்த பிரச்னையின் பெயர் ‘பைரோனி’ (Peyronie). இதுவொரு நோய். இந்த அளவுக்கு ஆணுறுப்பில் வளைவு கொண்டவர்கள் தங்கள் உறுப்பைத் தொட்டுப்பார்த்தால் உள்ளே கட்டிபோல இருக்கும். தவிர, இந்தளவுக்கு வளைந்திருப்பதால், ஆணுறுப்பின் நீளம் நார்மலைவிட குறைவாக இருக்கும். விறைப்புத்தன்மை அடையும்போது சுரீரென்று வலிக்கும் என்பதால், விறைப்புத்தன்மை முழுமையாக வருவதும் கஷ்டம்தான். இதுவும் ஆண்மைக்குறைபாட்டில் ஒருவிதம்தான்.
ஆணுறுப்பின் உள்ளே இருக்கிற கட்டியை அறுவை சிகிச்சை செய்து நீக்கலாம். அல்லது அந்தக் கட்டியின் மீது அதற்கான கால இடைவெளியுடன் ஊசி மருந்தைச் செலுத்தி கட்டியைக் கரைக்கலாம். வளைந்த ஆணுறுப்பு காரணமாக சில ஆண்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது திருமணத்தையே தவிர்த்து விடுகிறார்கள். அதெல்லாம் தேவையில்லாத பயம்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…