புதுடெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் இன்று (ஜன.15) காசி தமிழ்ச் சங்கமம் 3.0 அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கேடிஎஸ் 3.0-வின் மையக்கருவாக அமைந்துள்ள அகத்தியரின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. வரும் பிப்ரவரி 15 முதல் 24 தேதிகள் வரையிலான நிகழ்ச்சியில் மையக்கருவாக அகத்தியர் இடம் பெற்றுள்ளார்.இதற்கான அறிவிப்பை இன்று டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் மோடி இந்திய மாநிலங்களின் கலாச்சாரங்களை இணைக்கும் பணியை செய்து வருகிறார். இந்தவகையில், காசியுடன் தமிழகத்துக்கு இருக்கும் பாரம்பரியக் கலாச்சாரத் தொடர்புக்கு புனர்ஜீவிதம் அளிக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமத்தை துவக்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு அயோத்யாவில் திறக்கப்பட்ட ஸ்ரீராமர் கோயிலும், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா தரிசனமும் கிடைக்கும்.இந்தமுறை கேடிஎஸ் 3.0-வின் மூலக்கருத்தாக மகரிஷி அகத்திய முனிவர் வைக்கப்பட்டுள்ளது. இவர், தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவர்.காசி மற்றும் தமிழகத்துக்கு இடையிலான சிறந்த இணைப்பாக அகத்தியர் இருந்தார். காசியில் அகத்தியர் குண்டம் மற்றும் அகத்திய மகாதேவ் கோயில் அமைந்துள்ளன.
இமாலயத்தில் பிறந்தவரான அகத்தியரிடம் சிவன், தமிழகத்துக்கு செல்லும்படி கட்டளையிட்டதாக நம்பிக்கை உள்ளது. இதில், அகத்தியரிடம்தான் முருகன் தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்திய சித்த வைத்திய முறையை தோற்றுவித்தவராகவும் அகத்தியர் இருந்ததால் அவரது பிறந்தநாளை தேசிய சித்த நாளாக டிசம்பர் 19-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளாவின் களரி கலையை தோற்றுவித்தவர் அகத்தியர் என்ற நம்பிக்கையும் உள்ளது.
தமிழ் அரசர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு குலகுருவாகவும் அகத்தியர் இருந்துள்ளார். செம்மொழி தமிழின் இலக்கியத்தில் அகத்தியரின் பங்கு அதிகமானது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் அகத்தியர் பல நூல்களையும் எழுதியுள்ளார். ரிக்வேதத்தில் சுமார் 300 மந்திரங்களையும் எழுதியுள்ளார்.போர் நுட்பமான அதித்ய ரிதத்தை அகத்தியர் ராமருக்கு போதித்ததால் அவர் இலங்கைக்கு சென்று போரில் வென்றார்.
அகத்தியரை பற்றி ராமாயணம், மகாபாரதம் மற்றும் புத்த இலக்கியங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.அகத்தியர் தம் மனைவி லும்பமுத்ராவுடன் பாரதத்தின் ஆயிரக்கணக்காகக் கோயில்களில் குறிப்பாக, தமிழகத்தின் காவிரிக் கரையிலும் வழிபாடுகள் செய்த ஒரே முனிவர்.அகத்தியர் வழிபாடுகள் கிழக்காசிய நாடுகளான இந்தோனேஷியா, ஜாவா, கம்போடியா, மற்றும் வியட்நாமில் நடத்தப்படுகின்றன. இந்த அளவுக்கு புகழ்பெற்ற அகஸ்திய முனி இந்தமுறை கேடிஎஸ் 3.0-வின் மூலஆதாரமாக இருப்பார்.
கடந்தமுறை போலவே, வாரணாசியின் கங்கை கரைகளில் ஒன்றான நமோ காட்டில் கேடிஎஸ் 3.0 நடைபெற உள்ளது. இதற்கு வருகை தருபவர்களுக்கு விசேஷமாக மகா கும்பமேளாவில் ஓர் இரவு தங்க வைக்கப்படுவர். இதேபோன்ற விசேஷம் ஸ்ரீராமர் கோயில் அமைந்துள்ள அயோத்யாவிலும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் இளம் தலைமுறையினர் முன்னிறுத்தப்பட உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் முதல் கேடிஎஸ் நடைபெற்றது. சுமார் ஒரு மாதம் நடந்த நிகழ்வில் தமிழகத்திலிருந்து 4,000 பேர் பங்கு பெற்றனர்.இதையடுத்து, கேடிஎஸ் 2.0, 2023-ல் 10 நாட்களுக்காக நடைபெற்றது. டிசம்பர் 17-ல் துவங்கிய இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக அகத்தியரின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது. இதன்பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேடிஎஸ் 3.0, 2024-ல் நடைபெறவில்லை. இதற்கு, கேடிஎஸ் 3.0-வுக்கு வரும் தமிழர்கள் பிரயாக்ராஜில் துவங்கிய மகா கும்பமேளாவை காணவைப்பது ஒரு காரணமாகும்.