மதுரை: மதுரை பாலமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த நூற்றுக்கணக்கான காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாலமேட்டில் மஞ்சமலை சுவாமி ஜல்லிக்கட்டு விழா மஞ்சமலை ஆற்றில் நடைபெற்றது. பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக் கமிட்டி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இவ்விழா நடைபெற்றது. முன்னதாக, காலை 7.35 மணியளவில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் கிராமக் கமிட்டி சார்பில் 6 கோயில் காளைகள் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டன. போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். பின்னர், அமைச்சர் பி.மூர்த்தி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பதிவு செய்திருந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன.
பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் ஒவ்வொரு சுற்றிலும் வீரர்கள் களமிறங்கினர். முன்னதாக, காளைகளுக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை நடத்தி தகுதிச் சான்று வழங்கியபின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மேலும், மாடு பிடி வீரர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. விழாவைக் காண உள்ளூர் மக்கள், வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் பாலமேட்டுக்கு குவிந்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 44 பேர் காயமடைந்தனர். இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 5,000-க்கும் மேற்பட்ட காளைகளை பதிவு செய்திருந்தனர். இதில் 1,100 காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் பாலமேடு காளீஸ்வரி, அ.கோவில்பட்டி மலர்விழி, மானகிரி முருகலெட்சுமி, பொதும்பு பிரபா உள்ளிட்ட 20 பெண்கள் தங்களது காளைகளை அவிழ்த்துவிட்டனர். வீரர்களிடம் பிடிபடாததால் சிறப்பு பரிசாக பட்டுச்சேலை பெற்றனர். ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகர் உள்ளிட்ட பிரமுகர்களின் காளைகளும் அவிழ்க்கப்பட்டன. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக் காசு, வெள்ளிக்காசு, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்மண்டல ஐஜி பிரேம்ஆனந்த் சின்கா மேற்பார்வையில் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த், தேனி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தலைமையில் 2500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கார், டிராக்டர் பரிசுகள்: பாலமேடு ஜல்லிக்கட்டில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கு துணை முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. அடுத்து 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் துளசிராம் 2-ம் இடம் பிடித்து பைக் பரிசு பெற்றார். பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்து எலக்ட்ரிக் பைக் பெற்றார்.
சிறந்த காளையாக முதல்பரிசு பெற்ற சத்திரப்பட்டி தீபக்குக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. சின்னப்பட்டி கார்த்திக் 2-வது இடம் பெற்றார். இவருக்கு அலங்கை பொன் குமார் சார்பில் நாட்டின பசுவும், கன்றும் வழங்கப்பட்டன. 3-வது இடம் பிடித்த குருவித்துறை பவித்ரனுக்கு விவசாய வேளாண் கருவி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராசன் ஆகியோர் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
– என்.சன்னாசி , சுப.ஜனநாயகசெல்வம்