சினிமாத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குறைகளை தீர்ப்பதில் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாலிவுட் வர்த்தக சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
பாலிவுட் வர்த்தக சங்க தலைவர் சுரேஷ் ஷ்யாம் லால் குப்தா பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாலிவுட் திரைப்படங்களில் தின ஊதிய தொழிலாளர்களாக பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஜூனியர் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு குறைவான சம்பளம், நீண்ட பணி நேரம், பாதுகாப்பு குறைபாடு போன்ற பல குறைகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை விடுமுறை மற்றும் ஓய்வின்றி உழைக்கின்றனர். இவர்கள் பல நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டியுள்ளதால் அவர்களின் உடல் நலம் மற்றும் மன நலம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. படிப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் தரக்குறைவான உணவுகள் வழங்கப்படுகின்றன. இதனால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
வெளிப்புற படிப்பிடிப்புகளில் பெண் தொழிலாளர்களுக்கு உடைகள் மாற்ற போதிய வசதிகள் இல்லை. பாதுகாப்பற்ற இடங்களில் தங்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை அவர்கள் சமரசம் செய்துகொள்கின்றனர்.
இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் முறையான ஒப்பந்தம் இன்றி பணியாற்றுவதால் பணி பாதுகாப்பும் இல்லை. எனவே, சினிமா தொழிலாளர்களின் குறைகளை போக்குவதில் பிரதமர் தலையிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.