டெல்லி கோட்லா சாலையில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார்.
டெல்லியில் லுட்யன்ஸ் பங்களா பகுதியில் (எல்பிஇசட்) உள்ள 24, அக்பர் சாலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 1978-ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிலையில், எல்பிஇசட் பகுதியிலிருந்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் வேறு இடத்துக்கு மாற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2005-06-ல் உத்தரவிட்டது.
இதையடுத்து, 9ஏ கோட்லா சாலையில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அடிக்கல் நாட்டினர். பல்வேறு காரணங்களால் தாமதமாக வந்த இக்கட்டிடத்தின் கட்டுமானப் பணி சமீபத்தில் முடிவடைந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று திறந்து வைத்தார். அப்போது கட்சியின் கொடியேற்றப்பட்டு, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த புதிய கட்டிடத்துக்கு ‘இந்திரா பவன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, “கட்சித் தலைவர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் இந்திரா பவன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொலைநோக்கு பார்வை கொண்டிருக்கிறது என்பதை இந்த கட்டிடம் பிரதிபலிக்கிறது. அதேநேரம், நாட்டின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பை வடிவமைத்த தனது கடந்த காலத்துக்கு மரியாதை செலுத்துகிறது” என்றார்.
இதனிடையே, அக்பர் சாலையில் இருந்த அலுவலகம் காலி செய்யப்பட மாட்டாது என்றும் கட்சியின் சில பிரிவுகள் அங்கு இயங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.