Ravichandran Ashwin About BGT: கடந்த 4 முறை வென்று இந்தியா தக்கவைத்திருந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இம்முறை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வென்று, இந்தியாவிடமிருந்து கோப்பையை கைப்பற்றியது. கடைசி போட்டியில் வென்று கோப்பையை தக்கவைக்க முடியும் என்ற சூழலில் கூட இந்திய அணி தோல்வியை தழுவியது. இதற்கு முழுக்க முழுக்க பேட்டிங் யூனிட்டே காரணம் என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர்.
கடைசி டெஸ்டில் இந்திய பேட்டர்களை நிலைகுலையச் செய்த ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். காயம் காரணமாக விலகிய ஹேசில்வுட்டுக்கு பதிலாக அவர் போட்டியில் களம் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: தெலுங்கில் அறிமுகமாகும் விக்ரம் பிரபு – வெளியான வீடியோ
ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
இந்த நிலையில், தொடரின் பாதியிலேயே சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், அந்த ஆஸ்திரேலிய வீரர் விளையாடாமல் இருந்திருந்தால், இந்தியா பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றிருக்கும் என கூறியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் ‘ஆஷ் கி பாத்’ என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரு சிறந்த தொடரை விளையாடி உள்ளார் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் அங்குள்ள பந்து வீச்சாளர்கள் அனைவரும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிரமப்படுகின்றனர். ஏன் பேட் கம்மின்ஸும் சிரமப்பட்டார் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்காட் போலண்ட் போன்ற மாற்று வீரர் கிடைத்ததெல்லாம் அதிர்ஷ்டம். அவர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால், பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா வென்றிருக்கும்.
ஹேசில்வுட்டும் சிறப்பான பந்துவீச்சாளர்தான். ஆனால் ஆஸ்திரேலியா அதே பந்து வீச்சாளர்களோடு விளையாடியிருந்தால் நாங்கள் தொடரை வென்றிருப்போம். இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஸ்காட் போலண்டின் ரவுண்ட் தி விக்கெட் பந்துகள் முக்கிய பிரச்னையாக இருந்தன என்றார்.
அதிக விக்கெட்களை வீழ்த்திய கம்மின்ஸ், போலண்ட்
இத்தொடரின் முடிவில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் 21.36 சராசரியுடன் 25 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் 8 முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய நிலையில், ஐந்து முறை ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸை தொடர்ந்து வெறும் மூன்று போட்டிகளில் விளையாடிய ஸ்காட் போலண்ட் 13.19 சராசரியுடன் 21 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.
மேலும் படிங்க: பிரபல நடிகர் சயிஃப் அலி கானுக்கு கத்திக்குத்து! அதுவும் 6 முறை குத்திய திருடன்..நடந்தது என்ன?