புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலில் ஏழு மாதங்களில் ரூ.183 கோடி அளவில் காணிக்கைகள் பெறப்பட்டுள்ளன.இதில் வெள்ளி, தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கும்.
உத்தரப்பிரதேசம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா எனும் அறக்கட்டளை அமைத்து ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை அமைந்தது முதல் கோயில் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை குவியத் தொடங்கியது.
இந்த காணிக்கையின் மொத்த மதிப்புகள் அவ்வப்போது கணக்கிட்டு பொதுமக்களுக்கு வெளியிடப்படுகிறது. அந்தவகையில், கடந்த வருடம் (2024) ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களுக்கானதும் வெளியாகி உள்ளது. இந்த எண்ணிக்கையில் மொத்தம் ரூ.183 கோடி மதிப்பிலான காணிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில், ரூ.78 கோடி நேரடியாகவும், வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள தொகையின் வட்டி ரூ.105 கோடியாக உள்ளது.
இத்துடன் கோயில் உண்டியல் உள்ளிட்ட வேறுபல வகைகளில் காணிக்கையாக ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது. இவர்களுடன் சர்வதேச பக்தர்களால் ரூ.1 கோடியும் ராமர் கோயிலுக்கு காணிக்கையாகக் கிடைத்துள்ளது. இவை அன்றி வெள்ளியில் காணிக்கையான 94 கிலோ எடையில் கிடைத்துள்ளது. இதே காணிக்கையாக தங்கம் மார்ச் 2023 முதல் ஏப்ரல் 2023 வரை 20 கிலோவும் பெறப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை நடப்பு ஆண்டில் தங்கம் 7.29 கிலோ, தங்கம் 170 கிலோ வெள்ளியும் பெறப்பட்டுள்ளது. இந்த உலோகங்களை மத்திய அரசின் பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் கொடுத்து தரம் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதேவகையில், ராமர் கோயிலுக்கான அறக்கட்டளை அமைந்தது முதல் அதன் சொத்துக்களும் விரிவாக்கப்படுகின்றன. இந்தவகையில், சுமார் 37 ஏக்கர் நிலங்களை ரூ.328 கோடி விலையில் வாங்கப்பட்டுள்ளன.
இந்த நிலங்களில் பக்தர்கள் வசதிக்காக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதன்மூலம், அயோத்யாவின் ராமர் கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்துசெல்ல இயலும். கடந்த வருடம் ஜனவரியில் கட்டப்பட்டது முதல் அன்றாடம் சுமார் ஒரு லட்சம் வரையிலான பக்தர்கள், ராமர் கோயிலுக்கு வருகை புரிந்தபடி உள்ளனர். இந்த எண்ணிக்கை வார விடுமுறை நாட்களில் இருமடங்குகளாகவும், சிறப்பு பண்டிகை நாட்களில் மூன்று மடங்குகளாகவும் உயர்ந்துவிடுகிறது.