`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துச்சு’- ஷஃபாலி வர்மா

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் என்றழைக்கப்படுவர் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா. இருப்பினும், கடைசியாகக் கடந்த 2022-ல் ஜூலையில் இலங்கைக்கெதிராக ஒரு போட்டியில் அரைசதமடித்த ஷபாலி வர்மா, தன்னுடைய மோசமான ஃபார்ம் காரணமாக, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்துக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. கடைசியாக, கடந்த அக்டோபரில் தான் விளையாடிய நியூசிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 33, 11, 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.

ஷபாலி வர்மா

இருப்பினும், அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு இரண்டு உள்நாட்டு தொடர்களில் 12 போட்டிகளில் அதிரடியாக 527, 414 ரன்கள் வீதம் அடித்து மீண்டும் தேசிய அணியில் இடம்பிடிக்க ஆயத்தமாக்கிவருகிறார். இந்த நிலையில், தேசிய அணியிலிருந்து தன்னை நீக்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஷபாலி வர்மா கூறியிருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த ஷபாலி வர்மா, “அதைக் கடந்து வருவது எளிதானதல்ல (அணியிலிருந்து நீக்கப்பட்டது). அணியிலிருந்து என்னை நீக்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான், எனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த விஷயத்தைத் தெரியப்படுத்தவில்லை. அவர் குணமடையும் வரை அந்தச் செய்தியை அவரிடமிருந்து மறைத்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து அவரிடம் சொன்னேன். அப்பாவுக்கு எல்லாமே தெரியும்.

ஷபாலி வர்மா

சில சமயங்களில் குழந்தைகளாக நம் பலத்தை நாம் மறந்துவிடுகிறோம். ஆனால் அவர்கள் மறப்பதில்லை. என்னுடைய சிறுவயது உடற்பயிற்சிகளை எனது தந்தை நினைவூட்டினார். அதுதான் எனது பலம். சில சமயங்களில், நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ள, அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். என்னுடைய பலம் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிறப்பான இன்னிங்ஸை கட்டமைப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், மனதளவில் ஸ்மார்ட் ஆவதே நிலையான இலக்கு.” என்று கூறினார்.

Pratika Rawal

ஷபாலி வர்மாவுக்குப் பதில் இந்திய அணியில் எடுக்கப்பட்ட, பிரதிகா ராவல் ஆறு போட்டிகளில் ஒரு சதம், மூன்று அரை சதங்கள் அடித்து 444 ரன்கள் அடித்து, முதல் ஆறு போட்டிகளில் அதிக ரன்கள் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/PorattangalinKathai

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.