சிறாவயல் மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு; எஸ்ஐ உள்பட 122 பேர் காயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 750-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் போலீஸ் சார்பு-ஆய்வாளர், முன்னாள் பேரூராட்சித் தலைவர் உட்பட 122 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறாவயலில், தை 3-ம் நாளான இன்று புகழ்பெற்ற பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் வாணவேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.

தொழுவில் உள்ள மாடுகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை.

தொடர்ந்து பதிவு செய்திருந்த 243 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 165 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் எல்இடி டிவி, அண்டா, கட்டில், சைக்கிள், மிக்சி, புடவைகள், ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே சிறாவயல் பொட்டல், கும்மங்குடி பொட்டல், வயல்வெளிகளில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன. மாடுகள் முட்டியதில் போலீஸ் சார்பு-ஆய்வாளர் விஜயன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாக்ளா மற்றும் 8 மாடுபிடி வீரர்கள் உட்பட 122 பேர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் இருந்த 10 மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த 27 பேர் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் மாடு முட்டியதில் படுகாயமடைந்த தேவகோட்டை சின்னஊஞ்சனையைச் சேர்ந்த சுப்பையா என்பவர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மஞ்சுவிரட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆயுஷ்வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாங்குடி எம்எல்ஏ மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் கண்டுரசித்தனர். பாதுகாப்பு பணியில் 900 போலீஸார் ஈடுபட்டனர்.

காயமடைந்தோர் அதிகரிக்க காரணம்? – போலீஸாரின் கெடுபிடியால் கட்டுமாடுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்தது. மேலும் மஞ்சுவிரட்டு திடலை சுற்றிலும் கண்மாய்களில் தண்ணீர் நிறைந்திருந்ததால், கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் வெளியேற முடியாமல் பார்வையாளர்கள் பகுதிக்குள் புகுந்தது. இதனால் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்: இந்த மஞ்சுவிரட்டில் திருப்பத்தூர் அருகே ஆவந்திபட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் பிரிட்டோ, தைனீஸ்ராஜா (40) ஆகியோர் தங்களது காளையை அவிழ்த்துவிட்டனர். பின்னர் இருவரும் அந்த காளையுடன் நடந்து ஊருக்கு சென்றார். கம்பனூர் அருகே வந்தேபோது மாடு திடீரென மிரண்டு, கமுனி கண்மாய்க்குள் ஓடியது. காளையை காப்பற்ற இருவரும் கண்மாய்க்குள் சென்றனர்.

கண்மாய்க்குள் பாய்ந்த காளையை மீட்க சென்று உயிரிழந்த தைனீஸ்ராஜா.

இதில் கண்மாயில் இருந்த தாமரை கொடி சிக்கியதில் நீரில் மூழ்கி தைனீஸ்ராஜா உயிரிழந்தனர். சிறிது நேரத்தில் காளையும் வெளியேற முடியாமல் சிக்கி உயிரிழந்தது. அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், போலீஸார் உயிரிழந்த காளையையும், தைனீஸ்ராஜா உடலையும் மீட்டனர். மேலும் மீட்பு பணிக்காக சென்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவனை அவ்வழியாக வந்த மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் காயமடைந்தார்.

அவரை காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். காளை, உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து நாச்சியாபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.உயிரிழந்த தைனீஸ்ராஜா வேலூரில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.