புதுடெல்லி: டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது.
டெல்லிக்கான காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை தெரிவிக்கும் விதமாக பணவீக்கம் இல்லாத திட்டத்தினை கட்சி இன்று அறிமுகப்படுத்தியது. அதனை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிமுகம் செய்துவைத்தார். அப்போது டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய தெலங்கானா முதல்வர், “டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சி அதன் ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.” என்று தெரிவித்தார்.
கடந்த வாரத்தில், பெண் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. முன்னதாக, ஜன.8-ம் தேதி காங்கிரஸ் கட்சி‘ஜீவன் ரக்ஷா யோஜனா’என்ற திட்டத்தை அறிவித்தது. அதன்படி, ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
அதேபோல், படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில், ஒரு ஆண்டுக்கு மாதம் தோறும் ரூ.8,500 வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியின் 70 தொகுதிகளுக்கு பிப்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன. கடந்த 2015 மற்றும் 2020 வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றவாது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க தீவிரம் காட்டிவருகிறது.
மறுபுறம் கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து டெல்லியில் ஆட்சியில் இல்லாத பாஜக, பிரதமர் மோடியின் பேரழிவு குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் கட்சியை குறிவைத்து ஊழல் குற்றசாட்டுகளை முன்வைத்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனிடையே கடந்த இரண்டு பேரவைத் தேர்தல்களில் ஒரு இடத்திலும் வெற்றி பெறாத காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் முயற்சித்து வருகிறது.