அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் பங்குச் சந்தை குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் கணக்கு வழக்கில் முறைகேடு செய்திருப்பதாகவும் பங்கு விலையை செயற்கையாக அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியது. இதனால் அப்போது அதானி குழும பங்குகள் 50% வரை சரிந்தன. ஆனால் இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்தது.
இதுபோல, ஹிண்டன்பர்க் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்களின் மீது குற்றச்சாட்டுகளை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. பங்குத் தரகு நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள இந்நிறுவனம், சுயலாபத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நாதன் ஆண்டர்சன், தனது நிறுவன இணையதளத்தில், “நாங்கள் மேற்கொண்டு வந்த திட்டங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளோம். எங்களுடைய கடைசி திட்டத்தையும் (போன்ஸி) முடித்துவிட்டோம். இதுகுறித்து பங்குச்சந்தை வாரியத்திடம் தெரிவித்துவிட்டோம். அதன்படி இன்றுதான் (நேற்று) கடைசி நாள்” என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில், எங்கள் நிறுவனத்தை மூடும் முடுவுக்கு பின்னால் எவ்வித அச்சுறுத்தலும் காரணம் இல்லை எனவும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களைப் பெற அதானி குழுமம் லஞ்சம் வழங்கியதாக, அமெரிக்காவில் கவுதம் அதானி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த செயல் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜோ பைடன் அரசுக்கு குடியரசு கட்சி எம்.பி. லான்ஸ் கூடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுபோல, அதானி குழுமம் மட்டுமல்லாது இந்திய பங்குச் சந்தை வாரிய (செபி) தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவருடைய கணவர் மீதும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
நிதியுதவி வழங்கிய ஜார்ஜ் சோரஸ்: பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில், “அமெரிக்காவில் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்துக்கு ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளை நிதியுதவி வழங்கி வந்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தை முடக்கி வந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் மற்றும் அதற்கு நிதியுதவி வழங்கிய ஜார்ஜ் சோரஸ் அறக்கட்டளையுடன் காங்கிரஸ் கட்சி கூட்டு சேர்ந்து இந்தியாவின் சில்லறை முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது” என கூறியுள்ளார்.