புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவ்லின் 20 நாள் முகாம் திடீர் என ரத்தானது. உடல்நலக் குறைவு காரணமாக மகா கும்பமேளாவில் இருந்து 3 நாட்களில் பூடான் சென்றார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இதில் பங்கேற்க ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவ்லின் அமெரிக்காவில் இருந்து உ.பி. வந்தார். தனது குரு மகரிஷி வைஸானந்த் கிரியுடன் அவர் வந்திருந்தார். மகா கும்பமேளா நடைபெறும் பகுதியில் நிரஞ்சனி அகாடாவில் லாரன் தங்கினார். இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனாவில் யோகா பயிற்சி நிலையம் நடத்துவதுடன் இந்து மதக் கொள்கைகளை பரப்பி வரும் மகரிஷி வைஸானந்த் கிரிக்கு, மகா மண்டலேஷ்வர் பதவி அளிக்கப்பட்டது.
அதேபோல் லாரன் பவ்லின் மகா கும்பமேளாவில் 17 நாட்கள் கல்பவாசம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால், முதல் நாள் மகர சங்கராந்தி அன்று ராஜகுளியல் முடித்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நிரஞ்சனி அகாடாவினர் கூறியதாவது: ராஜகுளியல் முடித்த லாரன், மறுநாள் அம்ரித் எனும் 2-வது ராஜகுளியலை எடுக்க முடியவில்லை. அகாடா தலைவர் மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாசானந்த் கிரி வழிகாட்டுதலின்படி, மகா காளியின் மந்திரங்களை லாரன் ஓதினார். பிறகு அவர் கும்பமேளா முகாமை ரத்து செய்துவிட்டு திடீரென கிளம்பி விட்டார்.
பெரும் செல்வந்தராக இருந்தும் எங்களுடன் மிக எளிமையாகவே இருந்தார். அகாடாவில் பல்வேறு மூத்த துறவிகளிடம் சனாதனம் குறித்து கேட்டறிந்தார், இந்து மதத்தில் இணைவார் அல்லது துறவியாவார் எனக் கருதினோம். உடல்நலம் சரியான பிறகு அவர் மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அகாடாவினர் தெரிவித்தனர்.
புத்த மதத்தில் ஸ்டீவ்: ஸ்டீவ் ஜாப்ஸ், 1970-களில் இந்தியா வந்த பிறகு, புத்த மதத்தை பின்பற்ற தொடங்கினார். கிறிஸ்தவரான ஸ்டீவ் பின்னர் புத்த மத முறைப்படி லாரன் பவ்லினை திருமணம் செய்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு இறந்த ஸ்டீவ் உடலுக்கு அவரது குடும்பத்தினர் புத்த மதத்தின் வழியில் இறுதிச் சடங்குகள் செய்தனர்.
கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் கனவாக இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர் எழுதிய ஒரு கடிதம், ரூ.4.2 கோடிக்கு ஏலம் போனது. இந்நிலையில், கணவர் ஸ்டீவின் ஆசையை நிறைவேற்ற, மகா கும்பமேளாவுக்கு லாரன் வந்திருந்தார்.