விண்வெளியில் 2 விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி வெற்றி: இஸ்ரோவின் வரலாற்று சாதனை ஓர் அலசல்

சென்னை: ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் 2 விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

விண்வெளியில் ஆய்வு மையங்கள் அமைக்கும் தொழில்நுட்பம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் வசம் மட்டுமே இருக்கின்றன. அதேபோல, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, விண்ணில் ‘பாரதிய அந்தரிக்‌ஷ ஸ்டேஷன்’ (பிஏஎஸ்) எனும் ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலன்கள், ஆய்வு கருவிகள் மற்றும் பாகங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் ஒவ்வொன்றாக செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அதன்பிறகு, விண்ணில் இந்தியாவின் ‘பிஏஎஸ்’ விண்வெளி ஆய்வு மையம் வலம் வரும். விண்கலத்தில் சென்று அங்கு தங்கி, இந்திய விண்வெளி வீரர்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம். அதற்கான முன்னேற்பாடுகள், பரிசோதனைகள் தற்போது முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி ஆகிய 2 விண்கலன்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் 30-ம்தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவை. அவை இரண்டும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வந்தன. இரண்டுக்கும் இடையிலான தூரத்தை 20 கி.மீ. என்பதில் இருந்து படிப்படியாக குறைத்து, ஜனவரி 7-ம் தேதி ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், விண்வெளியின் புறச்சூழல் காரணமாக விண்கலஇயக்கத்தின் வேகம் எதிர்பார்த்ததைவிட குறைந்தது. இதனால், ஒருங்கிணைப்பு நிகழ்வில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, புறச்சூழல் காரணிகளுக்கு தீர்வு காணப்பட்டு, விண்கலன்களை நெருக்கமாக கொண்டு செல்லும் பணி கடந்த 10-ம் தேதி மாலை தொடங்கியது.

மிக மிக நெருக்கமாக அதாவது 3 மீட்டர் இடைவெளிக்குள் விண்கலன்கள் கொண்டு வரப்பட்டன. அப்போது இரு விண்கலன்களும் ஒன்றையொன்று புகைப்படம் எடுத்துக் கொண்டன. விண்ணில் தனித்தனியே சுற்றும் விண்கலன்களை மிக பாதுகாப்பாக அதேநேரம், மிக நெருக்கமாக கொண்டு வரும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். இதன்மூலம் விண்வெளி டாக்கிங் தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடாக இந்தியா மாறியுள்ளது. எரிபொருள் பரிமாற்றம், விண்கலன்களை விடுவித்தல் (Undock) ஆகிய பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட உள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. விண்வெளியில் விண்கலன்களை இணைப்பது மிகவும் சிக்கலான பணி. அதை இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிகழ்த்தி அரிய சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து ஒரு விண்கலத்தில் இருந்து மற்றொன்றுக்கு மின் எரிபொருள் பரிமாற்றப்பட உள்ளது. அதன்பின் விண்கலன்கள் மீண்டும் விடுவிக்கப்பட்டு அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளில் ஈடுபடும். இதற்காக விண்கலன்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து: பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பதிவில், ‘விண்கலன்கள் ஒருங்கிணைப்பதை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஒட்டுமொத்த விண்வெளி துறையினருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ஏவுதளம்: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது 2 ஏவுதளங்கள் உள்ளன. இதில், முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட்களும், 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்களும் ஏவப்படுகின்றன. இந்நிலையில், ரூ.3,985 கோடியில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஏவுதளம் அடுத்த 4 ஆண்டுகளில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மற்றும் என்ஜிஎல்வி (அடுத்த தலைமுறை) ராக்கெட்கள் ஏவப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.