புதுடெல்லி: உ.பி.யின் பிரயாக்ராஜில் நாட்டின் பல்வேறு மொழிகளை இணைக்கும் பாலமாக பாஷா சங்கம் செயல்படுகிறது. இதன் சார்பில் திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் என பல தமிழ் கவிகளுக்கு விழா எடுக்கப்பட்டுள்ளது.
பாஷா சங்கத்தின் நிறுவனரும் மறைந்த பொதுச் செயலாளருமான கிருஷ்ணசந்த் கவுடு, தமிழ் கற்றதால் அவருக்கு திருவள்ளுவர் மீது அதிக ஈடுபாடு வந்தது. இவர்தான், முதன்முதலில் 1990-ல் திரிவேணி சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயரை சூட்டி, அங்கு அவருக்கு சிலை வைக்க கோரினார்.
2009-ல் தமிழர் எம்.கோவிந்தராஜன் பாஷா சங்க பொதுச் செயலாளர் ஆன பிறகு அவர் மேற்கொண்ட முயற்சிகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 9 வருடங்களாக வெளிவந்துள்ளன. தற்போது பணி ஓய்வு பெற்ற எம்.கோவிந்தராஜன் இந்து தமிழ் திசையிடம் கூறுகையில் “கவுடுக்கு பிறகு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், அலகாபாத் மாநகராட்சி நவம்பர் 11, 2011-ல் நடத்திய கூட்டத்தில் சாலையின் பெயர் மற்றும் சிலைக்கு அனுமதி வழங்கியது. இந்த தகவல் தாமதமாக தெரியவந்ததால் மாநகராட்சி உத்தரவை 2017-ல் பெற்றோம். 2017, ஜுலை 10-ல் திருவள்ளுவர் பெயரை தென்கரை சாலைக்கு சூட்டி விழா நடத்தினோம். ஆனால் அந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதாக கூறி அலகாபாத் வளர்ச்சி ஆணையம், சிலை வைக்க தடை விதித்தது. தற்போது தடைகளை விலக்கி உ.பி. அரசே சிலை வைக்கிறது.
தடைகள் களையப்படுவதற்கு ‘இந்து தமிழ்’ வெளியிட்ட செய்திகளும் உத்வேகம் அளித்தது” என்றார். தற்போது உ.பி. அரசின் செலவில் மாமல்லபுரத்தில் வாங்கப்பட்ட சிலை, கடந்த ஜனவரி 12-ல் பிரயாக்ராஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மகா கும்பமேளாவுக்கு வரும்போது திருவள்ளுவர் சிலையை திறந்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.