சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3-வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கிவைத்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட 64 நாடுகளை சேர்ந்த பதிப்பகங்கள் இதில் பங்கேற்றுள்ளன.
சிறந்த தமிழ் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்லவும், உலக அளவில் சிறந்த படைப்புகளை தமிழுக்கு கொண்டுவரும் நோக்கிலும் தமிழக அரசு சார்பில் சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 3-வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நேற்று தொடங்கியது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட 64 நாடுகளை சேர்ந்த பதிப்பகங்கள் பங்கேற்றுள்ள இந்த பிரம்மாண்ட நிகழ்வை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
முதலாவது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவில் 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2-வது திருவிழாவில் 45 நாடுகள் கலந்துகொண்டு 750 ஒப்பந்தங்களும் அமைக்கப்பட்டன. தற்போது நடைபெறும் 3-வது திருவிழாவில் 64 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதன்மூலம் சுமார் 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளில் கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் பதிப்பாளர்களுக்கு தமிழக அரசு மொழிபெயர்ப்பு மானிய உதவி வழங்குகிறது. இதன்மூலம் சிறந்த தமிழ் படைப்புகள் உலக தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த வகையில், 36 மொழிகளில் 162 நூல்களுக்கு மொழிபெயர்ப்பு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல நூல்களுக்கு இந்த நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் எஸ்.சொக்கலிங்கம், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இத்தாலியின் பொலோனியா புத்தக நிறுவன இயக்குநர் ஜாக்ஸ் தாமஸ், ஜெர்மனியின் திரவுபதி வெர்லாக் இயக்குநர் கிறிஸ்டியான் வைஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக, பள்ளிக்கல்வி துறை செயலர் எஸ்.மதுமதி வரவேற்றார். நிறைவாக தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் மற்றும் பொது நூலக துறை இயக்குநர் பொ.சங்கர் நன்றி கூறினார். விழாவில், பாடநூல் கழக இணை இயக்குநர் தே.சங்கர சரவணன், பொது நூலக இயக்கக இணை இயக்குநர் எஸ்.இளங்கோ சந்திரகுமார் மற்றும் எழுத்தாளர்கள், புத்தக ஆர்வலர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
3 நாட்கள் நடைபெறும் விழாவில், கலந்துரையாடல், கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சி பட்டறை, குழு விவாதம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா நாளை (ஜன.18) நிறைவடைகிறது.