புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் பக்தர்கள் மீது மலர்கள் தூவ தாமதித்த ஹெலிகாப்டர் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் தனது கடுமையான கோபத்தைக் காட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 வருடங்களுக்கு பின்பு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதன் முக்கிய விசேஷ நாட்களில் நடைபெறும் ஆறு ராஜ நீராடல்களின்போது பக்தர்கள் மீது மலர்கள் தூவ அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தநிலையில், ஜனவரி 13 ஆம் தேதி துவங்கிய மகா கும்பமேளாவின் முதல் நாளில் பவுசு பூர்ணிமாவின் ராஜ நீராடல் நடைபெற்றது. இதில் விடியல் முதல் மலர்கள் தூவ ஏற்பாடு செய்த ஹெலிகாப்டர் வரவில்லை.
இதன் காரணமாக, மற்றொரு ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தாமதமாக மாலை 4.00 மணிக்கு மலர்கள் தூவப்பட்டுள்ளன. இதனால் உத்தரப் பிரதேச முதல்வர் மிகவும் கோபம் கொண்டதாகத் தெரிகிறது. மகா கும்பமேளா நிர்வாகத்தின் மீது தனது நேரடிப் பார்வையை முதல்வர் யோகி வைத்துள்ளார். இதில் அவர் எந்த தவறுகளும் நிகழக்கூடாது என்று கவனமாகவும் உள்ளார்.
எனவே, குறித்தநேரத்தில் ஹெலிஹாப்டர் மலர்கள் தூவத் தவறியது குறித்து கும்பமேளா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஹெலிகாப்டர் நிறுவனத்தின் சிஇஒ ரோஹித் மாத்தூர், பைலைட்டான கேப்டன் புனித் கண்ணா உள்ளிட்ட மூவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன் விசாரணையில் ஜனவரி 13 விடியல் முதல் மலர்கள் தூவவிருந்த ஹெலிகாப்டர், அயோத்தியாவிற்கு அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. மகா கும்பமேளாவில் எம்.ஏ. ஹெரிடேஜ் ஏவியேஷன்ஸ் பிரவைட் லிமிடெட் கம்பெனியிடம் மலர்கள் தூவும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு, எம்.ஏ நிறுவனம் மீது உத்தரப் பிரதேச அரசின் விமானப்போக்குவரத்துறை பிரிவின் பொறுப்பாளர் கே.பி.ரமேஷ் புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மூன்றாவது புனிதக்குளியல் வரும் ஜனவரி 29ம் தேதி மவுனி அமாவசை அன்று நடைபெற உள்ளது. பிறகு பிப்ரவரியில் 3ம் தேதி வசந்த பஞ்சமி, 12ம் தேதி மகர பூர்ணிமா மற்றும் 26ம் தேதி மகா சிவராத்திரி என மூன்று ராஜ நீராடல்கள் நடைபெற உள்ளன.
இதுபோல், உத்தரப் பிரதேசத்தில் பக்தர்கள் மீது மலர்கள் தூவும் வழக்கத்தை முதல்வர் யோகி துவக்கி வைத்தார். 2019-ல் இவர் முதல்வரான பின் அங்கு சிவராத்திரிகளில் நடைபெறும் காவடி யாத்திரைகளில் மலர்கள் தூவியது பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.