“Open AI -க்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்ததால் என் மகனை கொன்றுவிட்டனர்'' – சுசிர் பாலாஜியின் தாய்

சேட் ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனம்தான் தனது மகனைக் கொலை செய்ததாக பேசியுள்ளார் சுசிர் பாலாஜியின் தாயார் பூர்ணிமா ராவ்.

ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் பணியாற்றிய சுசிர் பாலாஜி, நிறுவனத்துக்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்ததாலும், அவர்கள் செய்யும் சட்ட விரோடங்களை அறிந்திருந்ததாலும் கொல்லப்பட்டார் என்கிறார் பூர்னிமா.

யார் இந்த சுசிர் பாலாஜி?

சுசிர் பாலாஜி அமெரிக்காவில் வளர்ந்த ஒரு இந்திய வம்சாவளி நபர் ஆவார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்த அவர், பல புரோகிராமிங் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்கேல் ஏஐ. ஹெலியா, குவோரா போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் இணைந்துள்ளார் சுசிர். ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் பிரபலமான உருவாக்கமாக அறியப்படும் சேட் ஜிபிடி செயலியின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

சுசிர் பாலாஜி குடும்பம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவனத்தை விட்டு வெளியேறிய சுசிர், சேட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ மாடல்களுக்கு பயிற்சி அளிக்க, சட்டவிரோதமாக இணையதளத்தில் இருந்து தரவுகளை பயன்படுத்தியதாக ஓப்பன் ஏஐ மீது குற்றம் சுமத்தினார்.

இதுகுறித்து நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையில், “ஒரிஜினலான கன்டென்ட்களுக்கு மாற்று பிரதிகளை உருவாக்கும் இந்த பழக்கம் இணையதளத்தின் அமைப்பை சீர்குலைக்கும். நான் நம்புவதை நீங்களும் நம்பினால் நிறுவனத்தில் இருந்து வெளியேறுங்கள்” என்று பேசினார்.

சுசிர் பாலாஜியின் மரணமும் சந்தேகங்களும்…

கடந்த நவம்பர் 26ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அப்பார்ட்மென்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சுசிர் பாலாஜி.

ராஜினாமா செய்த பிறகு, தனது தனிப்பட்ட புராஜெக்ட்களில் பணியாற்றிவருவதாக கூறியிருந்தார் சுசிர் பாலாஜி. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, ‘ஏ.ஐ மோசடிகள் குறித்து ஆராய்ச்சி செய்துவருகிறேன். அது முழுமடைந்த பிறகு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன். இதுக்குறித்து சில செய்தி நிறுவனங்களுடனும் நேர்காணல்களை ஏற்பாடு செய்துள்ளேன்’ என்று பேசியதாக அவரது தாய் கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சுசிர் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சுசிர் பாலாஜியின் தாய் இது தற்கொலை அல்ல எனப் போராடி வருகிறார்.

பூர்ணிமா ராவ் கூறுவதன்படி, சுசீர் பாலாஜி இறந்த இரண்டு நாள்களில் அவரது மொபைல் உள்ளிட்ட சாதனங்களை யாரோ இயக்கியிருக்கிறார்கள். மேலும், அவரது அப்பார்ட்மெண்டில் பல பொருள்கள் கலைத்து போடப்பட்டுள்ளன. பாத்ரூமில் ரத்தத்துளிகள் தெறித்துள்ளது. அவர் உடலில் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டபோது, அவர் தப்பிக்க முயன்ற தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சுசிரின் மரணம் அமெரிக்க மக்களிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது குடும்பத்தினர் FBI விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

எலான் மஸ்க் ஆதரவு…

ஏற்கெனவே சுசிர் பாலாஜியின் தாய் தன்னால் தனியாக போராடி உண்மையக் கண்டறிய முடியாது என்று எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோரை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போது, “இது தற்கொலை போல தெரியவில்லை” என பதிவிட்டார் எலான் மஸ்க்.

மேலும் தான் ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் வெளியாகவில்லை என்றும், அமெரிக்க மீடியாக்கள் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் பூர்ணிமா ராவ்.

பூர்ணிமா அளித்துள்ள நேர்காணலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள எலான் மஸ்க், “முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது” எனக் கூறியுள்ளார்.

சுசீர் பாலாஜி

தனது நேர்காணலில் பூர்ணிமா ராவ், “எனது மகன் ஓப்பன் ஏஐக்கு எதிரான ஆவணங்களை வைத்திருந்தார். அவர்கள் அவனைத் தாக்கியுள்ளனர், கொலை செய்துள்ளனர். சில ஆவணங்கள் காணமல் போயிருக்கின்றன.” என்று பேசியுள்ளார் பூர்ணிமா ராவ்.

மேலும் “எல்லாருமே அடக்கப்பட்டுள்ளனர். யாரும் வெளிவந்து உண்மையைச் சொல்லத் தயாராக இல்லை. வழக்கறிஞர்கள் கூட இது தற்கொலை என சொல்லவைக்கப்பட்டுள்ளனர்.” என்றும் தெரிவித்துள்ளார். சுசிரின் மரணம் தற்கொலை என்பதை வெறும் 14 நிமிடங்களில் தன்னிடம் தெரிவித்துவிட்டதாக அதிகாரிகள் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். மேலதிக தகவல்களைத் தெரிவிக்கவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.