மதுரை மெட்ரோ ரயில் நிலையம் அமைவிட பகுதியில் திட்ட நிர்வாக இயக்குநர் ஆய்வு

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள இடத்தை திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் அதிகாரிகள் குழு இன்று ஆய்வு செய்தது.

மதுரைக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.11,368 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி, திருமங்கலம் – ஒத்தக்கடை வரை சுமார் 32 கி.,மீட்டர் தூரத்துக்கு வழித்தடமும், 26 ரயில் நிலையங்களும் அமைக்கின்றன. இதற்கான ஆரம்பக்கட்ட பணி முடிந்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக திட்டம் காத்திருக்கிறது. இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகில் அமையும் நிலத்தடி (பூமிக்கு அடியில்) மெட்ரோ ரயில் நிலைய இருப்பிடத்தை தேர்வு செய்வது பற்றி இன்று ஆய்வு நடந்தது.

அப்போது சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் மெட்ரோ திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் அடங்கிய குழுவினர், இரு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பது, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு, வெளியேறும் இடம், மதுரை ரயில் நிலையத்தின் வருகை, புறப்பாடு நீதிமன்றங்களை ஒருங்கிணைக்க முன்மொழிந்த மறுவடிவமைப்பு கிழக்கு முனையக் கட்டிடம் மற்றும் மதுரை கல்லூரிக்கு பின் பகுதியில் நிலத்தடி சாய்வுப் பாதையை கடப்பது, ஆண்டாள்புரம் மெட்ரோ நிலையத்தை பொருத்தமான முறையில் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை ரயில்வே கோட்ட மூத்த கோட்டப் பொறியாளர் சூர்யமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக் செய்தியாளர்களிடம் கூறியது: ”மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடக்கும் நிலையில், மெட்ரோ ரயில் நிலையமும் இப்பகுதியில் வருகிறது. இரண்டு ரயில் நிலையங்களை ஒருங்கிணைப்பது பற்றி ரயில்வே நிர்வாக முதன்மை துணை பொறியாளருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டோம்.

இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையில் குறுகிய இடைவெளியில் பொதுமக்கள் ஒரு (மெட்ரோ – தென்னக ரயில்வே) நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு சுலபமாக பயணிகள் சென்று வர ஏதுவாக இரு நிலையங்களை அமைப்பது குறித்தும் பார்த்தோம். மெட்ரோ ரயில் திட்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்போது மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு குறித்த அறிக்கை முழுமையாக இல்லை. தற்போது இரண்டு திட்டங்களிலும் சிறிய மாற்றத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்த சில மாதத்தில் கட்டுமான பணி தொடங்கும்.

அடுத்த 4 ஆண்டில் பணி முடிந்து மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். மதுரை, கோவையில் நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க பூர்வாங்க பணிக்காக ஆய்வு நடத்துகிறோம். உயர்நிலை பால வழித்தடம் அமைக்க 2 ஆண்டும், பூமிக்கு அடியில் சுரங்கப்பாதை வழித்தடம் அமைக்க 3 ஆண்டு வரை ஆகலாம். ஆனாலும், 4 ஆண்டில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதமும் ஆய்வு செய்ய இருக்கிறாம். இதன்பிறகு வழித்தடம், 26 மெட்ரோ ரயில் நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.