உயிரிழந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் வழக்கறிஞர்களுக்கு சிறை

மாஸ்கோ,

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் ஜெர்மனியில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷியா திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்து ரஷிய போலீசாரால் கைது செய்யப்பட்டார். நவால்னியின் அமைப்பு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது.

இவர் மீது தேச துரோகம், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் நவால்னிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரஷியாவின் யமலோ நினெட்ஸ் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவால்னி 2024 பிப்ரவரி மாதம் உயிரிழந்ததாக ரஷிய அரசு தெரிவித்தது.

இதனிடையே, அலெக்சி நவால்னி சிறையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக 3 வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வடிம் கொப்சக், இகொர் செர்குயின், அலெக்சி லிப்ஸ்டின் ஆகிய 3 வழக்கறிஞர்களும் நவால்னிக்கு ஆதரவாக வாதிட்டனர். இதையடுத்து, இந்த 3 வழக்கறிஞர்களும் கடந்த 2023 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ரஷியாவின் விளாடிமிர் ஒப்லெஸ்ட் மாகாண கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் உயிரிழந்த அலெக்சி நவால்னியின் வழக்கறிஞர்கள் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 பேருக்கும் மூன்றரை ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.