விராட் கோலிக்கு புதிய சிக்கல்.. சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா?

Virat Kohli: சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அணியின் பிரதான வீரர்களின் மோசமான செயல்பாடே என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

ஒருபக்கம் தனது கிரிக்கெட் கரியரில் பார்த்திடாத சரிவை கண்டார் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அவர் மொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்தார். மறுபக்கம் முதல் போட்டியில் மட்டும் சதம் அடித்த விராட் கோலி அடுத்து நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 

உள்ளூர் கிரிக்கெட் விளையாட வலியுறுத்தப்பட்டது

இவர்கள் இருவர் உட்பட இந்திய மூத்த வீரர்கள் அனைவரும் ரஞ்சி போன்ற முதல் தர போட்டிகளில் விளையாடி தங்களது ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும். எதிர் வரும் பெரிய தொடர்களை எதிர்கொள்ள ரஞ்சி போன்ற முதல் தர போட்டிகள் உதவியாக இருக்கும் என இந்திய முன்னாள் வீரர்கள் பலர் வலியுறுத்தினார்கள்.

மேலும் படிங்க: 23 கி.மீ-க்கும் மேல் மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங்.. டாடா அல்ட்ராஸின் சிறப்பம்சங்கள்! 

பிசிசிஐயின் புதிய கட்டுப்பாட்டுகள் 

இந்தியாவின் தொடர் தோல்விகளால் கடும் அதிருப்தியிலிருந்த பிசிசிஐ கடும் நிபந்தனைகளை விதித்திருக்கிறது. 

அதன்படி, இந்திய அணி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும்போது மனைவியை அழைத்துச் செல்ல அனுமதியில்லை. அனைத்து வீரர்களும் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், அனைத்து வீரர்களும் ஒரே விமானத்தை பயன்படுத்த வேண்டும், இதில் யாருக்கும் சிறப்பு சலுகை கிடையாது. 

மேலும், பயிற்சியின் போது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் மட்டும் இந்திய அணியில் இனி இடம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.  

விராட் கோலிக்கு காயம்

இதனைத் தொடர்ந்து விராட் கோலி ரஞ்சியில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், விராட் கோலிக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு கழுத்தில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக அவர் வலி நிவாரணி எடுத்துக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது. இதனால் அவர் டெல்லி அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

ஒருபக்கம் விராட் கோலி மாநில வீரர்களுடன் இணைந்து வலைப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கழுத்து வலியை காரணமாக வைத்து அவர் ரஞ்சி போட்டியை புறம் தள்ளுகிறாரா அல்லது உண்மையாகவே அவருக்கு கழுத்து வலி தானா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். ஒருவேளை அவர் ரஞ்சி கோப்பையில் பங்கேற்காவிட்டால் பிசிசிஐ அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. 

மேலும் படிங்க: உலகிலேயே இரண்டாவது வீரர்.. மாபெரும் சாதனை படைத்த பொல்லார்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.