சர்வதேச பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் பாரதம் 3-வது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் பாரத போக்குவரத்து கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். வரும் 22-ம் தேதி வரை பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் நொய்டா, மார்ட் என டெல்லியின் பல்வேறு இடங்களில் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 100 புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பாரதத்தின் ஆட்டோ மொபைல் துறையில் அந்நிய முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. சர்வதேச பயணிகள் வாகன சந்தையில் பாரதம் 3-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு நாட்டின் ஆட்டோமொபல் துறை 12 சதவீத வளர்ச்சி அடைந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் பாரதத்தில் 2.5 கோடி வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
உள்நாட்டில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் வாகன உற்பத்தி அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடாக பாரதம் விளங்குகிறது. நாட்டின் இளம் தலைமுறையினரும் நடுத்தர வர்க்க மக்களும் அதிக அளவில் கார்களை வாங்குகின்றனர். இதன்காரணமாக பாரதத்தின் வாகன சந்தை அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு நாட்டின் உள்கட்டமைப்புகளுக்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்காரணமாக நாடு முழுவதும் புதிய தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பி.எம். கதிசக்தி திட்டத்தின் கீழ் பன்னோக்கு போக்குவரத்து திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையால் சரக்கு கட்டணம் கணிசமாக குறைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் வாகனஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைந்திருக்கிறது.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் குறு,சிறு நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. சரக்கு, சுற்றுலா துறைகளும் வளர்ச்சி அடைந்து உள்ளன.
பொது போக்குவரத்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து, சொகுசான, பாதுகாப்பான பயணம், நெரிசல் இல்லாத போக்குவரத்து, மின்மயமாக்கல், காற்று மாசுவினை குறைத்தல், போக்குவரத்து துறையில் அதிவேக வளர்ச்சி ஆகிய 7 அம்சங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
வாகன உற்பத்தியில் பசுமை தொழில்நுட்பங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஹைட்ரஜன், உயிரி எரிபொருள், மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேசிய மின்சார வாகன திட்டம், ஹைட்ரஜன் திட்டம் ஆகியவை வெற்றிகரமாக அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைந்து வருகிறது.
பாரதத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓராண்டில் 2,600 மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த 2024-ம் ஆண்டில் பாரதம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விற்பனை 8 மடங்காக அதிகரிக்கும்.
பேம் 2 திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 16 லட்சம் மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இதில் 5,000 மின்சார பேருந்துகளும் அடங்கும். தலைநகர் டெல்லியில் 1,200 மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பி.எம். இ-டிரைவ் திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கும் இருசக்கர, 3 சக்கர, ஆம்புலன்ஸ், லாரிகள் வாங்க நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 28 லட்சம் மின்சார வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.
நாடு முழுவதும் 70,000 விரைவு மின்சார சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பி.எம். இ பேருந்து திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க நிதியுதவி வழங்கப்படும்.
மின்சார வாகனங்களுக்கு தேவையான பேட்டரி உற்பத்திக்காக ரூ.18,000 கோடியில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்த துறையில் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டுகிறேன். குறிப்பாக இளைஞர்கள் பேட்டரி உற்பத்தி துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வேண்டும்.
பழைய வாகனங்களை அழிப்பது தொடர்பான கொள்கையை மத்திய அரசு வரையறுத்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மானிய உதவியும் வழங்கப்படுகிறது. புதிய திட்டத்தை வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.