தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை கௌசல்யா.
பப்ளியான ஹீரோயின்களைத்தான் தமிழ் ரசிகர்கள் விரும்புவாங்க அப்படிங்கற பொதுக்கருத்தை உடைச்ச தமிழ் ஹீரோயின்கள்ல முக்கியமானவங்க நடிகை கௌசல்யா. ஒல்லியான உடல்வாகு, நெடுநெடு உயரம், க்யூட் சிரிப்பு, சூப்பர் ஆக்டிங்னு தமிழ் மக்களைச் சிலாகிக்க வெச்ச கன்னடத்துப் பைங்கிளி இவங்க.
“ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்”:
குறிப்பா, 90-கள்ல தமிழ் ரசிகர்கள் கெளசல்யாவைப் பார்த்து “ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்” அப்படின்னு சொக்கிப்போனாங்கன்னுதான் சொல்லணும். கிளாமரா நடிக்கமாட்டேன்னு தன் கரியர் கொள்கையில ரொம்ப உறுதியா இருந்து, ஹோம்லி குயினா பிரகாசிச்சாங்க கெளசல்யா. தமிழ் மட்டுமல்லாம தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு பல மொழிகள்லயும் நடிப்புல பட்டையைக் கிளப்பிய இவங்களோட இன்ட்ரஸ்ட்டிங்கான திரை வாழ்க்கையைப் பார்ப்போம்.
கௌசல்யா பெங்களூருவைச் சேர்ந்தவங்க. இவங்களோட ஒரிஜினல் பேரு கவிதா சிவசங்கர். திரையுலகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி இவங்க மாடலிங் பண்ணிட்டு இருந்தாங்க. விளம்பரம் ஒண்ணுல இவங்களைப் பாத்த பிரபல மலையாள இயக்குநர் பாலசந்திரமேனன், 1996-ம் வருஷம் தான் இயக்கி நடிச்ச ‘ஏப்ரல் 19’ படத்துக்கு கெளசல்யாவை நாயகியா புக் செஞ்சார். தன் 17 வயசுல, ‘நந்தினி’ங்கிற பெயர்ல இவங்க ஹீரோயினா அறிமுகமானது இப்படித்தான்.
இதுக்கப்புறமா, 1997-ம் வருஷம் ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் மூலமா கௌசல்யாங்கிற பெயர்ல தமிழ் சினிமாவுல அறிமுகமானாங்க. குறிப்பா, ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’னு கெளசல்யாவை நினைச்சு ஹீரோ முரளி பாடுற பாட்டு, இந்தப் படத்தோட வெற்றிக்கும் பெரும் பங்கு வகிச்சது.
முரளி சாரின் சப்போர்ட்:
“இந்தப் படத்துல முரளி சாருக்கு ஜோடியா நான் அறிமுகம் ஆனேன். அந்த நேரத்துல எனக்குத் தமிழ் சுத்தமா தெரியாது. அதனால தமிழ் வசனங்களுக்கான அர்த்தத்தைத் தெரிஞ்சுக்க முடியாம ரொம்ப திணறினேன். அப்போ, முரளி சார்தான் தமிழ் வசனங்களுக்கான அர்த்தத்தை எனக்குக் கன்னட மொழியில விளக்கிச் சொல்லுவார். அந்த நேரத்துல, முரளி சாரின் சப்போர்ட் மட்டும் கிடைக்கலைன்னா ரொம்ப சிரமப்பட்டிருப்பேன்”னு பல பேட்டிகள்ல சொல்லிருக்காங்க கௌசல்யா.
இந்தப் படம் கொடுத்த வெற்றியால அடுத்ததா விஜய்க்கு ஜோடியா ‘நேருக்கு நேர்’ படத்துல நடிச்சாங்க. விதவிதமான மாடர்ன் டிரஸ், செம ஸ்டைலான லுக்னு படம் முழுக்க வளையவந்து, விஜய்யின் செல்லம் கொஞ்சும் காதலியா கச்சிதமா நடிச்சிருப்பாங்க. இந்தப் படமும் கமர்ஷியல் ஹிட்டடிக்க, வெற்றிப்பட ஹீரோயின்கள் வரிசையில கௌசல்யாவும் இடம்பிடிச்சாங்க. அடுத்தடுத்து கெளசல்யாவுக்குப் பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பிச்சது. தமிழ் சினிமாவுல வெற்றிகரமான ஹீரோயினா வலம் வந்தாலும், சரளமா தமிழ்ப் பேச முடியாம ஆரம்பகாலத்துல கஷ்டப்பட்டிருக்காங்க கெளசல்யா.
நீ எதுக்கு நடிக்க வந்திருக்க?:
“மொழி தெரியாம ஒரு படத்துல நடிக்கிறது ஈஸியான விஷயம் இல்ல. ஒருதடவை பிரபல இயக்குநர் ஒருவரின் படத்துல நடிக்கிறப்போ, காட்சி ஒண்ணுல அவர் எதிர்பார்த்த அளவுக்கு என்னால வசனங்களைப் பேச முடியல. உடனே அவர், ‘குரங்கு மூஞ்சியை வச்சுக்கிட்டு நீ எதுக்கு நடிக்க வந்திருக்க?’னு என்னைத் திட்டினார். நான் இயல்பிலேயே ரொம்ப ஸ்போர்ட்டிவ்வான பர்சன். அதனால, அந்த டைரக்டர் திட்டியதை நான் பர்சனலா எடுத்துக்கல. தமிழ் மொழியைச் சீக்கிரமே கத்துக்கணும், அடுத்தமுறை இதுபோல தவறு செய்யக் கூடாது அப்படிங்கிற உறுதியை மட்டும் நான் மனசுல ஏத்திக்கிட்டு, சீக்கிரமே தமிழ்ப் பேசக் கத்துக்கிட்டேன்”னு பேட்டி ஒண்ணுல வெளிப்படையா பேசியிருக்காங்க.
அந்த நேரத்துல, நடிகர் அப்பாஸூடன் ‘ஜாலி’ படத்துல காலேஜ் ஸ்டூடன்ட்டா துள்ளலுடன் நடிச்சாங்க கெளசல்யா. அதன்பிறகு, விஜய்யுடன் இவங்க சேர்த்து நடிச்ச ‘ப்ரியமுடன்’ படம், கெளசல்யாவுக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்துச்சு. குறிப்பா, விஜய் நெகட்டிவ் ஹீரோவா நடிக்க, அவரோட அதீத அன்பைத் தாங்க முடியாத பெண்ணா நடிச்சு அசத்தியிருப்பாங்க கௌசல்யா. ராஜஸ்தான்ல தகிக்குற பாலைவனத்துல ‘பூஜாவா பூஜாவா பூஜைக்கு வந்த நிலவே வா’ பாட்டுல நடிகர் விஜய்யுடன் இவங்க ஆடிய டூயட் டான்ஸ் செம ஹிட்.
“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ‘ப்ரியமுடன்’ படத்துல வர்ற ‘பூஜாவா பூஜாவா’ பாடல் ஷூட்டிங்ல, பாலைவனத்தின் சூடு தாங்காம என் மூக்கிலிருந்து ரத்தம் வந்திடுச்சு. எனக்காக ஷூட்டிங்கை சில மணி நேரம் தள்ளி வெச்சாங்க. அந்த நேரத்துல இயக்குநர் வின்சென்ட் செல்வா சார், நடிகர் விஜய் சார், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் என்மேல அக்கறை எடுத்து ரொம்பவே சப்போர்ட் பண்ணாங்க”னு ‘ப்ரியமுடன்’ படம் பத்தின தன் நினைவுகளைப் பேட்டி ஒண்ணுல பகிர்ந்திருக்காங்க கௌசல்யா.
முன்னணி நடிகையா இருந்த கெளசல்யா, அப்போ ஹீரோவா வளர்ந்துவந்த லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து நடிச்ச ‘சொல்லாமலே’ படம், காதலைப் புது கோணத்துல சொல்லி வெற்றியடைஞ்சது. ‘பூவேலி’ படத்துல, தன் கணவரா உதவி செய்ய வந்த கார்த்திக்கை காதலிச்சு கரம் பிடிக்கிற உணர்வுபூர்வமான ரோல்ல நெகிழ வெச்சிருப்பாங்க. இந்தப் படம், அந்த வருஷத்தின் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் கெளசல்யாவுக்கு வாங்கிக் கொடுத்துச்சு.
நதியே அடி நைல் நதியே!
கெளசல்யாவுக்குப் பெரிய நன்மதிப்பை வாங்கிக் கொடுத்த படம் ‘ஆசையில் ஒரு கடிதம்’. சந்தேக புத்தி கொண்ட கணவரின் கொடுமைகளைத் தாங்கிக்கிட்டு வாழுற அப்பாவி மனைவியா மிகையில்லா நடிப்பில் யதார்த்தமா வாழ்ந்திருப்பாங்க. ‘வாழ்வா… சாவா?’ங்கிற கட்டத்துல, கிளைமாக்ஸ் காட்சியில தன் புருஷனை லெஃப்ட் அண்டு ரைட் வாங்கி, ‘நீயெல்லாம் ஆம்பளையே இல்லை’னு சொல்லி, தாலியைக் கழட்டி கணவன்மேல வீசிட்டு, ஹீரோ பிரசாந்துடன் பயணிக்கிற கெளசல்யாவின் துணிச்சல், திரையரங்குகள்ல கைதட்டல் ஆரவாரத்தையும், தமிழ்க் குடும்பங்கள்ல அபரிமிதமான அன்பையும் இவருக்கு வாங்கிக் கொடுத்துச்சு. இதைத் தொடர்ந்து, ‘வானத்தைபோல’ படத்துல ‘நதியே அடி நைல் நதியே’னு பிரபுதேவாவுடன் போட்டிப்போட்டு டான்ஸ் ஆடிய கெளசல்யாவுக்கு, அந்தப் படத்துல நடிச்சப்போ நடிகர் விஜயகாந்த் மூலமா பெரிய போதனையும் கிடைச்சிருக்கு.
“பொதுவாவே நான் கொஞ்சம் ரிசர்வுடு கேரக்டர். ஷாட் முடிஞ்சதும் யார்கிட்டவும் மிங்கிள் ஆகாம, தனியா போய் உட்கார்ந்துப்பேன். என்னைக் கவனிச்ச விஜயகாந்த் சார், ‘நீ இப்படித் தனியாவே இருந்தா, உன்னால நட்பு வட்டங்களை உருவாக்கிக்க முடியாது. சினிமால சாதிக்கணும்னு உனக்கு ஆசையிருந்தா, இப்படித் தனியா இருக்காத. எல்லார்கூடவும் சேர்ந்து இரு. உன் நட்பு வட்டத்தை அதிகப்படுத்திக்கோ. உன் தனிமையையும் தயக்கத்தையும் தூரப்போடு’னு சொன்னார். அதுக்கப்புறமாதான் எல்லார்கூடவும் ஓரளவுக்கு மிங்கிளாக ஆரம்பிச்சேன்”னு நேர்க்காணல் ஒண்ணுல நன்றி மறவாத நினைவுகளுடன் நெகிழ்ச்சியா சொல்லியிருக்கார் கெளசல்யா.
மனதைத் திருடிய கதாநாயகி!
நடிகர் முரளியுடன் ‘உன்னுடன்’, பிரபுதேவாவுடன் ‘ஏழையின் சிரிப்பில்’ மற்றும் ‘மனதைத் திருடிவிட்டாய்’, பார்த்திபனுடன் ‘ஜேம்ஸ்பாண்டு’, சத்யராஜுடன் ‘குங்குமபொட்டு கவுண்டர்’, நடிகர் அருண் பாண்டியனுக்கு தங்கையா ‘தேவன்’, ‘ராஜகாளியம்மன்’, ‘தாலி காத்த காளியம்மன்’ உள்ளிட்ட நிறைய வெற்றிப் படங்கள்ல நடிச்சு, 90-களின் முன்னணி ஹீரோயினா முத்திரை பதிச்சாங்க நம்ம கெளசல்யா. ‘சந்தித்தவேளை’ படத்துல, தன் கணவர் இறந்துபோனது தெரியாம, அவர் மாதிரியே இருக்கிற இன்னொரு கார்த்திக்குடன் இவர் குடும்பம் நடத்துறது டச்சிங்கா இருக்கும். பின்னணிப் பாடகி பி.சுசீலாவின் ஆஸ்தான ரசிகையா மிகையில்லா நடிப்பைக் கொடுத்து கெளசல்யா ரசிகர்களின் மனம் கவந்த படமான ‘மனதை திருடிவிட்டாய்’னு வித்தியாசமான, ஹோம்லியான கதைகளைத் தேர்வு செஞ்சு யதார்த்த நாயகியா ஸ்கோர் பண்ணாங்க.
இதையெல்லாம் தாண்டி, கெளசல்யாவைத் தமிழ் சினிமாவின் காதல் தேவதைனு பாராட்டலாம். ஏன்னா, இவங்க அளவுக்கு உணர்வுபூர்வமான காதல் சப்ஜெக்ட் படங்கள்ல வேற எந்த ஹீரோயினும் அதிகளவுல நடிக்கல. கெளசல்யாவின் முதல் தமிழ்ப் படமான ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்துல ஆரம்பிச்சு, ‘சந்தித்தவேளை’ வரைக்குமான இவர் நடிச்ச படங்கள்ல கெளசல்யாவின் கேரக்டர்களை உன்னிப்பா கவனிச்சா புரியும். காதல் மற்றும் அதை மையப்படுத்திய ஆண் – பெண் உணர்வுகளையும், குடும்பச் சிக்கல்களையும் ஹேண்டில் பண்ற பெண்ணின் மன ஓட்டத்தை கெளசல்யாவின் நடிப்பு நுட்பமாவும் நேர்த்தியாவும் பிரதிபலிச்சிருக்கும். இப்படி, முதல் இன்னிங்ஸ்ல அப்லாஸ் வாங்கின கெளசல்யாவுக்கு, செகண்டு இன்னிங்ஸ் எப்படி இருந்துச்சுனு பலருக்கும் தெரியுமில்லையா?
சினிமாவில் ரீ-என்ட்ரி!
ஆமாங்க… வாழ்க்கை எப்பவுமே ரோஜா படுக்கையா மட்டுமே இருக்காதுங்கிறதுக்கு ஏற்ப, கௌசல்யாவின் வாழ்க்கையிலயும் பல சிக்கல்கள் உண்டாச்சு. குறிப்பா, நரம்பு சம்பந்தமான பிரச்னையால இவங்க பாதிக்கப்பட்டாங்க. மருந்துகளின் பக்க விளைவுகளால இவங்களோட உடல் எடை ரொம்பவே அதிகமாச்சு. இதன்காரணமா சினிமாவிலேருந்து சில காலம் பிரேக் எடுத்தாங்க. அதுக்கு அப்புறமா, உடல் எடையைப் பழையபடி குறைச்சாங்க. மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தாங்க. அப்படி, கெளசல்யா கம்பேக் கொடுத்த படம்தான் ‘திருமலை’. ‘நேருக்கு நேர்’, ‘ப்ரியமுடன்’ படங்கள்ல விஜய்க்கு ஜோடியா நடிச்ச இவங்க, விஜய் – ஜோதிகா ஜோடியா நடிச்ச ‘திருமலை’ படத்துல ரகுவரனுக்கு ஜோடியா சப்போர்ட்டிங் ரோல்ல நடிச்சிருந்தாங்க.
மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியா நடிச்சுட்டு, கொஞ்ச காலத்துலேயே அவர் படத்துல சப்போர்ட்டிங் ரோல்ல நடிக்கிறதுக்குத் தெளிவும் அசாத்திய உறுதியும் வேணும். இந்த இரண்டும் கௌசல்யாகிட்ட நிறையவே இருந்துச்சு. இந்தப் பக்குவம், சினிமால மட்டுமில்லைங்க. கெளசல்யாவுக்கு வாழ்க்கையில முக்கியமான சில முடிவுகளை எடுக்கிறதுலயும் இருந்துச்சு.
“வாழ்க்கையை அதன் போக்குல அக்செப்ட் பண்ணிக்கிற ஆளு நான். அதனால, ‘ஹீரோயினா நடிச்சுட்டு இப்போ ஒரு சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டா மாறிட்டோமே’ அப்படியெல்லாம் நான் யோசிக்கல. அதுமட்டுமில்லாம ‘திருமலை’ படத்துல ரகுவரன் சாருக்கு ஜோடியா நான் நடிச்ச அந்த கேரக்டர் ரொம்ப கவித்துவமா லவ்வபிளா இருக்கும். அதனால, முழு மனசோட அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டேன்“னு தன் கம்பேக் பத்தி ஒருமுறை புன்னகையுடன் சொல்லிருந்தாங்க கௌசல்யா.
அதன்பிறகு, மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்கள்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிச்சாங்க. அந்த நேரத்துலதான், தமிழ்ல ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்துல ஹீரோ ஜெயம் ரவியின் அக்காவா, எந்நேரமும் போன்ல தன் கணவர்கிட்ட பேசிக்கிட்டே இருக்கிற வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சு கவனிக்க வெச்சாங்க. அதைத் தொடர்ந்து, ‘பூஜை’, ‘சங்கிலி புங்கிலி கதவைத் திற’, ‘நட்பே துணை’னு தொடர்ந்து தமிழ் சினிமாலயும் தன் இருப்பைத் தக்க வெச்சுக்கிட்டு இருக்காங்க.
திருமணத்தில் முடியாத ரிலேசன்ஷிப்!
இதெல்லாம் சரி… இப்பதான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கோம். யெஸ்… சினிமா நட்சத்திரங்கள் எல்லாருமே கட்டாயமா எதிர்கொள்ளக் கூடிய, கல்யாணம் சார்ந்த பர்சனல் கேள்விகளை கெளசல்யாவும் பலமுறை எதிர்கொண்டிருக்காங்க. 46 வயசாகிற கெளசல்யா, இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. ஒருமுறை அதுக்கான காராணத்தைப் பகிர்ந்த கெளசல்யா, “சினிமால பிஸியா இருந்தப்போ, நான் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தேன். ஆனா, சில காரணங்களால அது கல்யாணத்துல முடியல”னு வெளிப்படையா சொல்லியிருக்காங்க.
கூடவே, “குடும்பம், குழந்தைங்கிற பெரிய பொறுப்பை என்னால சிறப்பா கையாள முடியுமான்னு தெரியல. இப்போ வரைக்கும் நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறதுக்கு இதுவும்கூட ஒரு காரணம்”னு தன் நிலைப்பாட்டை ஸ்டேட்மென்ட்டா பதிவு பண்ணியிருக்காங்க. கௌசல்யாவுக்கு அவரின் அம்மான்னா உயிர். அதேமாதிரி அப்பா, தன் அண்ணன், அண்ணி, அண்ணன் மகள்னு குடும்பத்தினருடன் பெங்களூருல சந்தோஷமா வாழ்ந்துட்டு வர்றாங்க.
“என் மகள் கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது எனக்கு மிகுந்த மனவலியைக் கொடுத்தாலும், மகளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒருபோதும் கட்டாயப்படுத்தமாட்டேன். அதேசமயம், என் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்”னு கௌசல்யாவோட அம்மா, தன் சென்டிமென்ட்டையும் ஓர் இடத்துல விவரிச்சிருக்காங்க.
கெளசல்யாவின் தனிப்பட்ட விருப்பம் அல்லது அவங்க அம்மாவின் ஆசையில எது ஜெயிச்சாலும் அது சம்பந்தப்பட்டவங்களோட தனிப்பட்ட பர்சனல் விஷயம்ங்கிறதை உணர்ந்து, அவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, ‘பிடிச்சதை பண்ணுங்க… சந்தோஷமா இருங்க’னு கெளசல்யாவை மனப்பூர்வமா வாழ்த்துவோம்!
– நாயகிகள் வருவார்கள்!