திருவனந்தபுரம்: முனம்பம் வக்பு நிலப் பிரச்சினைக்கு கேரள அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தினார்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள முனம்பம், சேரை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் 404 ஏக்கர் நிலத்துக்கு கேரள மாநில வக்பு வாரியம் உரிமை கோருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள மக்கள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் நிலவரி ரசீதுகள் தங்களிடம் இருக்கும் நிலையில், வக்பு வாரியம் சட்டவிரோதமாக தங்கள் நிலம் மற்றும் சொத்துகளுக்கு உரிமை கோருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:இது முஸ்லிம்- கிறிஸ்தவர் பிரச்சினை அல்ல. இது சட்ட விவகாரம். எனவே சட்ட வழியில் தீர்க்கப்பட வேண்டும். எனவே இதை ஒரு வகுப்புவாத மோதலாக மாற்ற வேண்டாம். இது ஒரு நிர்வாக மற்றும் சட்டக் குழப்பம்.
இது விரைவில் தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு கேரள அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நீதிமன்ற நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும். இதன் மூலம் இவர்கள் தங்கள் நிலங்களைப் பெற முடியும். இவ்வாறு சசி தரூர் கூறினார்.