Harbajan singh about bcci new rules: இந்திய அணி சமீப காலமாக படுதோல்விகளை சந்தித்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோல்வி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் படுதோல்வி என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இந்த தோல்விகளுக்கு காரணம் மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பதே. கேப்டன் ரோகித் சர்மா மொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்தது, முதல் போட்டியில் சதம் அடித்தது தவிர்த்து மற்ற 4 டெஸ்ட்டிலும் விராட் கோலியின் மோசமான பேட்டிங் என சொதப்பலுக்கு மேல் சொதப்பல். இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் விமர்சித்தனர்.
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்திய அணி இன்று அறிவிப்பு!
பிசிசிஐ-யின் புதிய கட்டுப்பாடுகள்
இத்தோல்விகளால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது மனைவியை அழைத்துச் செல்ல அனுமதி இல்லை. அனைத்து வீரர்களும் ஒரே விமானம் ஒரே பேருந்தை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து கட்டுப்பாடுகளை விதித்து வீரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது பிசிசிஐ.
புதிய கட்டுப்பாடுகளை விமர்சித்த ஹர்பஜன் சிங்
இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், வீரர்கள் மனைவியுடன் செல்வதாலோ அல்லது தனியாக பயணிப்பதாலோ இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை என விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததற்கு வீரர்கள் மனைவியுடன் சென்றதோ அவர்கள் தனியாக பயணித்ததோ காரணம் இல்லை. தோல்விக்கு மோசமான விளையாட்டே காரணம்.
தற்போது வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளில் 9 கட்டுப்பாடுகள் நாங்கள் விளையாடிய காலத்திலேயே அமலில் இருந்தவை. இடையில் அதனை மாற்றியது யார், எப்போது மாற்றப்பட்டது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவின் தோல்விகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே தற்போது இந்த கட்டுப்பாடுகள் வெளியாகியுள்ளன. இந்தியா அணி மோசமாக விளையாடியதே தோல்விகளுக்கு காரணம்.
முன்னதாக, சில விஷயங்களுக்கு பிசிசிஐயின் ஒப்புதல் பெற வேண்டும். நீங்கள் பிசிசிஐக்கு மெயில் அனுப்பலாம். தலைமை பயிற்சியாளர் ஏன் தலையிட வேண்டும்? அது அவருடைய வேலை கிடையாது” எனத் தெரிவித்தார்.
மேலும் படிங்க: நாடாளுமன்ற எம்.பி.யுடன் கரம் பிடிக்கிறாரா ரிங்கு சிங்? யார் அந்த பிரியா சரோஜ் எம்.பி.?