புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் பலவித பாபாக்கள் கவனம் ஈர்த்து வருவது தொடர்கிறது. அந்த வகையில் கழுத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க அணிகலன்களுடன் ‘தங்க பாபா’ என்பவர் முகாமிட்டு ஆசி வழங்குகிறார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில், அந்த அகாடாவில் முகாமிட்டுள்ள ‘கோல்டன் பாபா’ (தங்க பாபா) என்பவர் உள்ளார். அவரைக் காணவே அத்தனைக் கூட்டம் அலைமோதுகிறது. கேரளாவைச் சேர்ந்த இந்த தங்க பாபாவின் பெயர் எஸ்.கே.நாரயண் கிரி என்பதாகும். இவர் தனது ஆன்மிகப் பணிகளுக்காக தற்போது டெல்லியில் இருந்து வருகிறார். இவரது கழுத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க அணிகலன்கள் மின்னுகின்றன. பத்து விரல்களிலும் தாங்க மோதிரங்கள், கையிலுள்ள கைப்பேசியை பாதுகாக்கும் உறையும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு தங்கங்களை அணிந்த பின்பும் இந்த பாபா, ஆன்மிகத் துறவியாகத் தன்னை முன்னிறுத்துகிறார். இவரின் தோற்றம் காரணமாக, தங்க பாபா செல்லும் இடம் எங்கும் பக்தர்கள் கூட்டமும், பார்வையாளர்கள் கூட்டமும் அதிகமாகக் கூடி விடுகிறது. இந்தியாவின் கல்வியில் சனாதனத்தை பரப்புவது தனது பணி எனும் தங்க பாபா, “இந்தியாவில் இரண்டு துறவிகள் ஆட்சி புரிகின்றனர். இதில் நம் தேசத்தை காக்கும் பிரதமராக நரேந்திர மோடியும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தும் உள்ளனர். இவர்கள் சனாதனத்தை சிறந்த முறையில் காக்கும் பாதுகாவலர்களாகவும் உள்ளனர்.
இவர்களது ஆட்சியினால் நாம் அனைவரும் இந்த நாட்டின் மகா கும்பமேளாவில் எந்த கவலையும் இன்றி அமர்ந்துள்ளோம். இவர்களது ஆட்சியும் தொடர நாம் அனைவரும் அவர்களுக்கும், சனாதனத்துக்கும் ஆதரவளிப்பதை தொடர வேண்டும்” என்று தெரிவித்தார். கல்வியில் ‘வேதிக் பிசிக்ஸ்’-ல் பணியாற்றும் இந்த தங்க பாபா, நான்கு வேதங்களிலும் இயற்பியல் குறித்து ஆய்வும் செய்து வருகிறார். மொத்தம் 4 கிலோ எடையில் தங்கம் அணிந்துள்ள தங்க பாபா மேலும் 2 கிலோ தங்க அணிகலன்கள் அணிய உள்ளாராம்.