போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 28 குழந்தைகள் உள்பட 115 பேர் பலி

காசா,

இஸ்ரேல்-காசா இடையே நீண்ட காலமாக மோதல்போக்கு நிலவி வந்தது. எனவே 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரில் இதுவரை சுமார் 46 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

வீடுகளை இழந்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு தேடி எல்லை பகுதியில் தஞ்சம் அடைந்தனர். எனவே போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன் பயனாக இருதரப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து வைத்துள்ள 33 பணய கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டனர்.

அதேபோல் தங்களிடம் உள்ள பணய கைதிகளை விடுவிக்கவும், புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்களது சொந்த கிராமத்துக்கு செல்ல வகைசெய்யவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. போா் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு அண்மையில் ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் 28 குழந்தைகள் மற்றும் 31 பெண்கள் உட்பட குறைந்தது 115 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 265 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “போர்நிறுத்த அறிவிப்பு இருந்தபோதிலும், காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது, போர்நிறுத்த ஒப்பந்தத்தை சுற்றியுள்ள சில மணிநேரங்கள் காசாவுக்கு இது “கடந்த வாரத்தில் மிகவும் ரத்தக்களரியான நாள்” என்று மஹ்மூத் பாசல் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், “ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி உள்ளது. போர்நிறுத்தம் அமலுக்கு வரும் வரை அமைதி எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பாலஸ்தீன பொதுமக்களை கொன்றது குறித்து எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது” என்று கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.