ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கி கடந்த 17-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், விடுமுறை நீங்கலாக 10, 13, 17-ம் தேதிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நிறைவு நாளான 17-ம் தேதி மனுதாக்கல் செய்தனர்.
மொத்தமாக 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதையொட்டி, வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் குவிந்திருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ், பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 55 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 3 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மணீஷ் தெரிவித்தார்.
மனுக்களை திரும்ப பெற நாளை (ஜன.20) கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்படும். சின்னமும் ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை பலர் கேட்டால், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.