நம் விகடன் நேர்காணலுக்காக ஜீ5 ஓடிடி தளத்தின் முதன்மை வணிக அலுவலர் (Cheif Business Officer CBO) சிவா சின்னச்சாமியைச் சந்தித்தோம்.
தொழிற்நுட்ப ரீதியாகப் பார்வையாளர்களைக் கவர ஜீ5 ஓடிடி நிறுவனம் எடுத்திருக்கும் திட்டங்கள் என்ன?
தொலைக்காட்சிகளில் ஒரு ஷோவையோ, படங்களையோ பார்க்க வேண்டும் என்றால், அவர்கள் அதை எப்போது ஒளிபரப்புவார்களோ அப்போது தான் பார்க்க முடியும். ஆனால் ஓடிடியில் நினைத்த நேரத்தில் எந்த திரைப்படத்தையோ ஷோவையோ பார்க்க முடியும். அதுவும் நிறைய ரெக்கமன்டேஷன்ஸ், பெர்சனலிஷேஸன்ஸ் இப்படி நிறைய இருக்கிறது.
உங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரிந்து அந்த மாதிரி கண்டெட்டுகளைக் கொடுப்பது. உங்களுக்கு ஆக்ஷன் படம் பிடிக்கும். இன்னொருவருக்கு வேறு மாதிரி பிடிக்கலாம். அவரவருக்கு ஏற்ற மாதிரி அவங்க விருப்பத்திற்கு ஏற்ப கண்டன்ட் ப்ரொவைட் செய்யவேண்டும். அந்த மாதிரி ரெக்கமன்டேஷன்ஸ், பெர்சனலிஷேஸன்ஸ்ல நிறைய புதிய மாற்றங்கள் பண்ணிருக்கோம். இன்னும் பண்ணிக்கிட்டு இருக்கோம்.
ஓடிடி நிறுவனங்கள் எல்லாமே கார்ப்பிரேட்கள். அதனால், அந்தந்தப் பிராந்திய மொழிப் படங்களின் நேட்டிவிட்டிகளை நன்கு தெரிந்த ஆட்கள் போதுமான அளவிற்கு ஓடிடி நிறுவனங்கள் வைத்திருக்கின்றனவா? இந்த நேட்டிவிட்டிக் குறித்த பிரச்னைகளை எப்படி கையாளுகிறீர்கள்?
ஜீ5-வைப் பொருத்தமட்டில் கதையின் நேட்டிவிட்டியைப் புரிந்து கொள்ளும் ஆட்கள் கதைக் கேட்கும் குழுவில் போதுமான அளவிற்கு உள்ளனர். குறிப்பாக தமிழில் ஜீ தமிழ் சேனல் நன்றாகப் போய்க்கொண்டுள்ளது. ஜீ திரை எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருக்கிறது. நிறைய பாஸிட்டிவ் கமெண்ட் மக்களிடம் இருக்கிறது. அதே போல தான் மற்ற பிராந்திய மொழிகளுக்கும் நிறைய பாஸிட்டிவ் கமெண்ட் இருக்கிறது. சிறந்த கதைகளை ஜீ நிறுவனம் எப்போதும் வரவேற்கும்.
ஓடிடிகள் அறிமுகமாகும்போது புதிய முயற்சிகளுக்கும் புதுப்புது கதைகளுக்குமான இடமாக இருந்தது. ஆனால் இப்போது திரையரங்க உரிமையாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதே மாதிரியான எதிர்பார்ப்புகளை ஓடிடி நிறுவனங்களும் எதிர்பார்க்கிறார்கள். பெரிய ஹீரோ, பான் இந்தியா திரைப்படம் பெரிய இயக்குநர் இப்படியெல்லாம். ஏன் இந்த திடீர் மாற்றம்?
ஜீ அப்படி எல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதைகளுக்குத்தான் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். பெரிய ஹீரோ படம், பெரிய இயக்குநர் படம் அப்படியெல்லாம் பார்ப்பதில்லை. பெரிய படங்களும் தோல்வியடைந்துள்ளன. சின்ன படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே படத்தின் கதை தான் முக்கியம். பெரிய ஹீரோ, பெரிய இயக்குநரின் கதை நன்றாக இருக்கும் போது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பர் அவ்வளவு தான்.
ஓடிடி நிறுவனங்களிடம் பவுண்டட் ஸ்கிரிப்டை முழுவதுமாகவே எழுதிக் கொடுத்தாலும், படப்பிடிப்புக்குப் போகவே 1.5 முதல் 2 வருடங்கள் ஆகின்றன. ஆனால், முந்தைய சூழலில் ஓரிரு மாதங்களிலேயே படம் தொடங்கிவிடும். ஓடிடிகளில் ஏன் இந்த தாமதம்?
முடிந்தளவு வேகமாகப் படத்தைத் தொடங்க தான் முயற்சி செய்வோம். ப்ராஜெக்ட் டு ப்ராஜெக்ட் இது மாறும். சில படங்கள் வேகமாக முடிந்து விடும். சில படங்களுக்குத் தாமதம் ஏற்படும். அது இயக்குநர், நடிகர், நடிகைகளின் டேட்டை பொருத்தது. சில சமயம் அவர்கள் வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பர். அப்போது நம்மால் படத்தைத் தொடங்க முடியாது. அப்போது நாம் சிறிது இடைவெளி விடத்தான் வேண்டும். மற்றபடி தாமதப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கம் எல்லாம் கிடையாது.
வெப் சீரியஸ்கள் உலகம் முழுவதும் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. சினிமாக்களுக்கு நிகராக பெயர் பெற்றிருக்கின்றன. இந்தியா அளவில் இந்தி மொழி வெப் சீரியஸ்கள் மட்டுமே பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. பிராந்திய மொழிகளில் ஏன் ஓடிடி நிறுவனங்களால் வெற்றிகரமான வெப் சீரியஸ்களை தொடர்ந்து கொடுக்க முடியவில்லை. வெப் சீரியஸ்களுக்கான ஃபார்மெட் அப்படி இருக்கின்றதா?
நல்ல கதைதான் காரணம். அயாலி எல்லாம் எடுத்துக்கீட்டிங்கன்னா பெரிய வெற்றி அந்த கதை. பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது ஐந்தாம் வேதம் வெப் சீரிஸ்க்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்த சீரிஸ இப்போது மற்ற மொழிகளிலும் டப் பண்ணி வெளியிட்டு கொண்டிருக்கிறோம். இந்தியிலும் பெரிய வரவேற்பு இருக்கிறது. கிராமத்தில் நடக்குற விஷயம், ஏஐ டெக்னாலஜி இப்படி பல விஷயங்கள் இந்த சீரிஸ்ல இருக்கிறது. ஜீ-யை பொருத்த வரை தொடர்ந்து நல்ல சீரிஸ பண்ணிட்டு இருக்கிறோம்.
ஒரு படைப்பாளி ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்தை அணுகி, தங்களின் கதையைச் சொல்ல முடியும். ஆனால், ஓடிடி நிறுவனங்களை ஒரு படைப்பாளி அணுகவே முடியவில்லையே. முழுக்க ஒரு க்ளோஸ்டான கட்டமைப்பாக இருக்கின்றன ஓடிடிகள். எப்படி ஒரு இளம் படைப்பாளி ஓடிடி நிறுவனங்களை அணுக வேண்டும்?
ஜீ நிறுவனத்துக்குப் பிராந்திய மொழி தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எங்களுக்கென்று கிரியேட்டிவ் டீம் இருக்கிறது. நல்ல கதை களம் உள்ள படங்களைத் தொடர்ந்து தேர்வு செய்கிறோம். அதனால் ஜீ-யை அணுகுவது கடினமானது அப்படியெல்லாம் இல்லை. ஐந்தாம் வேதம் எல்லாம் எங்களுக்கு வெளியிலிருந்து வந்த கதைதான். சரியான கதை எங்களோட டைமிங்கிற்கு ஒத்துப்போகும்னா கண்டிப்பாக நாங்கள் அதை எடுத்து செய்வோம்.
பெரும்பாலும் ஓடிடி நிறுவனங்கள் தங்களின் ஓடிடி நிறுவனங்களை ப்ரமோட் செய்ய, பெரிய இயக்குநர்களின் படைப்புகளை வாங்குகின்றன. ஆக, ஓடிடிகளின் படைப்பை மையப்படுத்துகிறதா? இல்லை இயக்குநர், நடிகர்களை மையப்படுத்துகிறதா?
ஒவ்வொரு ஓடிடி-க்கும் ஒவ்வொரு ஸ்ட்ரடர்ஜி இருக்கும். அதற்கு ஏற்றவாறு அவை நடக்கும். ஜீ5 பொருத்தவரை கதை, திரைக்கதை மையப்படுத்திதான் நகர்ந்து கொண்டிருக்கும். மீடியாவில் ஒரு பெரிய ஹிட் கொடுத்தாலே பிரபலமாகி விடலாம். நாம் அதற்கு முன்னரே அவர்களோடு கமிட் ஆகி இருப்போம். ஆனால் படம் துவங்குவதற்கு முன்னர் அவர்கள் பிரபலமாகி இருந்தால் பிரபலமானவர்களை வைத்து படம் பண்ணுவதாக நினைத்து கொள்வர். சில சமயங்களில் சில கதைகளுக்கு இவரை வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோணும். அப்போது அவர்களை வைத்து படம் எடுப்பர். மற்றபடி கதை முக்கியம் சில நேரங்களில் கதையில் நடிப்பவர்களும் முக்கியம்.
இந்தியத் திரைப்பட உலகமும், ஓடிடிகளின் கார்ப்ரேட் வடிவமும் பிரச்னைகள் இல்லாமல் இணைந்து செயல்பட முடிகிறதா?
பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை. புதிய மாற்றங்கள் வரும் போது அதோடு சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஆனால் மாற்றம் அவசியம் தேவை. கொரோனா காலங்களில் திரையுலகைக் காப்பாற்றியது ஓடிடிகள் தான். கிடப்பில் இருந்த பல படங்களை வெளியிட்டு தயாரிப்பாளர்களின் நஷ்ட அளவைக் குறைத்தது ஓடிடிகள் தான். நமக்கு பிடித்த படங்களைப் பிடித்த நேரத்தில் பார்த்துக் கொள்ள ஓடிடி ப்ளாட்பார்ம் உதவியது.
டோரண்ட்கள், பைரேடட் படங்கள் போன்றவற்றை ஓடிடி நிறுவனங்கள் எப்படி சமாளிக்கின்றன?
டோரண்ட்கள் என்பது என்னை பொருத்தவரை ஒரு திருட்டு. கலை திருட்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு திரைப்படம் என்பது பலரின் உழைப்பு. ஒருவரின் உழைப்பைச் சுரண்டுவது பெரிய குற்றம். அந்த குற்றத்தைப் பொதுமக்கள் ஆதரிக்க கூடாது. இதையும் ஒரு சமூக கடமையாக மக்கள் பார்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். எங்கள் தரப்பில் இருந்தும் டோரண்ட்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹாலிவுட் படங்களை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அதை இந்திய மொழிகளில் டப் செய்கிறீர்கள்?
நல்ல கதை மக்களின் வரவேற்பு ஆகியவைப் படங்களைத் தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும். பிரமாண்டமான கதைகளை எல்லாம் ரீமேக் செய்வது கடினம். ஆனால் அதை நம் மக்களுக்கு நம் மொழியில் டப் செய்வதன் மூலம் அந்தக் கதைகளை இன்னும் ஆழமாய் கொடுக்க முடியும். சில படங்களை நம் மண்வாசனை கலந்து ரீமேக் செய்ய முடியும். அப்படிபட்ட படங்களை ரீமேக் செய்கிறோம். சில படங்களை அவற்றின் மொழியிலே காட்டுவது தான் சிறந்ததாய் இருக்கும். அப்படிப்பட்ட படங்களை டப் செய்யாமல் வெளியிடுவர்.
ஒரு ஓடிடி ப்ளாட்பார்ம் ஆக ஜீ5 எதனால் ஜல்லிக்கட்டை ஒளிபரப்பு செய்துள்ளது?
மற்ற ஓடிடி நிறுவனங்களைத் தாண்டிய ஒரு சிறப்பம்சம் ஜீ-யில் உண்டு. அது தான் எங்களின் பிராந்திய மொழி சேனல்கள். நாங்கள் இந்தியாவின் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நானும் தமிழ்நாட்டுக்காரன்தான். இந்த மண்ணின் கலாசாரத்தை உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் ஜீ ஓடிடியில் ஜல்லிக்கட்டை ஒளிபரப்பு செய்தோம். அதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…