IPL 2025: இந்தியன் பிரிமியர் லீக் அதாவது ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி அணிக்கு சென்ற கே.எல்.ராகுல்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டான இருந்த கே.எல்.ராகுலை விடுவித்து, அந்த அணி நிகோலஸ் பூரானை ரூ.21 கோடிக்கும், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ் ஆகியோரை தலா ரூ. 11 கோடிக்கும் மொசின் கான், ஆயுஷ் பதோனி ஆகியோரை தலா ரூ.4 கோடிக்கும் தக்க வைத்தது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை முதல் மூன்று சீசன்களுக்கு கே.எல்.ராகுல் வழிநடத்தினார். அந்த அணி முதல் இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுகளுக்குள் முன்னேறியது. இருப்பினும் இரண்டு முறையும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்த சூழலில் கடந்த முறை லக்னோ அணிக்கு மற்ற முடியாததாக அமைந்தது. ஏனெனில் அந்த அணி 7வது இடத்தை பிடித்தது. இதனால் அந்த அணி நிர்வாகம் அதிருப்தி அடைந்தது.
மேலும் படிங்க: இதுவரை பிக்பாஸ் டைட்டில் வென்ற பிரபலங்கள்..இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட பண்ட்
இந்த சூழலில்தான், நடைபெற்ற மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டார். இதன் மூலம் ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பெற்றார். இதனைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் யார்? ரிஷப் பண்ட் அல்லது 21 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்ட நிகோலஸ் பூரன் என ரசிகர்களால் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட்டின் டெல்லி அணி பயணம்
2016ஆம் ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த ரிஷப் பண்ட், 2021ஆம் ஆண்டு அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அந்த ஆண்டு டெல்லி அணி பிளே ஆஃப் சுற்று வரை சென்றது. ஆனால் கொல்கத்தா அணியுடனான தோல்வியால் அந்த அணி இறுதிப் போட்டியை எட்டவில்லை. 2022ஆம் ஆண்டு சீசனை 5வது இடத்தில் முடித்தது.
அந்த ஆண்டு முடிவில் ஏற்பட்ட கார் விபத்தால் ரிஷப் பண்ட் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் உள்ளிட்ட இந்திய போட்டிகளில் விளையாடவில்லை. மீண்டும் அணிக்கு திரும்பிய நிலையில் அவரது தலைமையில் டெல்லி அணியால் 6வது இடத்திலேயே கடந்த சீசனை முடிக்க முடிந்தது. ரிஷப் பண்ட் வர இருக்கும் ஐபிஎல் சீசனில் லக்னோ அணியை வழி நடத்தும்பட்சத்தில் அவர் எப்படி செயல்படுகிறார் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மேலும் படிங்க: சென்னையில் பயங்கரம்! அண்ணன், தம்பி ஒரே இரவில் ஓட ஓட வெட்டிக்கொலை