Champions Trophy Indian Cricket Team | பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன்ஸ் டிராபி விளையாடும் இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் இந்த அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடியபோதும் இந்திய அணியில் மட்டும் அவருக்கான இடம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரிஷப் பந்த் விளையாட அதிக முன்னுரிமையை கேப்டன் ரோகித் சர்மா கொடுக்கிறார். தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என விரும்புகிறார். அணி தேர்வு தொடர்பான கூட்டத்தில் கூட இது குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. ரிஷப் பந்துக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என கவுதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார். சாம்சன் ரிஷப் பந்தைவிட அதிக சராசரி வைத்திருப்பதையும் கவுதம் கம்பீர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் சஞ்சு சாம்சன் வேண்டாம், ரிஷப் பந்த் சாம்பியன்ஸ் டிராபி ஆடட்டும் என ஒருமித்த குரலில் பேசியுள்ளனர். முடிவில் கவுதம் கம்பீர் பேச்சு எடுபடாமலேயே இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்க வேண்டும் என்றும் கம்பீர் வலியுறுத்தினார். அந்த கோரிக்கையையும் பிசிசிஐ தேர்வுக்குழு ஏற்கவில்லை. அவருக்கு பதிலாக இளம் பிளேயர் சுப்மன் கில் புதிதாக இந்திய அணியின் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கேப்டன் ரோகித் தொடர்ச்சியாக சஞ்சு சாம்சனை புறக்கணிப்பதிலேயே மும்முரம் காட்டி வருகிறார்.
அவர் ரிஷப் பந்துக்கு மிகவும் பேவரைட்டாக இருக்கிறார். ரிஷப் ஒழுங்காக விளையாடவில்லை என்றாலும் அவரையே இந்திய அணியில் தேர்வு செய்கிறார் கேப்டன் ரோகித் சர்மா. இருப்பினும் கம்பீர் எப்படியாவது சஞ்சு சாம்சனை சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணிக்குள் கொண்டு வர முயற்சியில் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அவரை எளிதாக இந்திய அணிக்குள் இணைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். சஞ்சு சாம்சனுக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் மட்டும் சிறப்பாக அமைந்துவிட்டால், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவும் இன்னும் வாய்ப்பு இருப்பதாக கவுதம் கம்பீர் மற்றும் சாம்சன் அனுதாபியில் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.