சமீபத்தில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்புணர்வு கொடூரத்தை எதிர்த்து சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு 8 கேள்விகள் கேட்டு விவாதத்தைக் கிளப்பியிருந்தார் சத்யராஜின் மகள் திவ்யா. தனது ‘மகிழ்மதி’ இயக்கம் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது, வெளிமாநிலங்களிலும் பல்வேறு சேவைகளைச் செய்துவரும் திவ்யா சத்யராஜ், ஆரோக்கியமான சமூகம் உருவாக தொடர்ந்து விழிப்புணர்வூட்டி வருகிறார். அவ்வப்போது அரசியல் கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்துவந்தவர், அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், திவ்யா சத்யராஜ் இன்று ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.
இது தொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.,வில் இணைந்தார். அப்போது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.