வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்பட்ட புதிய தடைச்சட்டம் காரணமாக அமெரிக்கர்கள் ‘டிக் டாக்’ செயலியை இனி பயன்படுத்த முடியாது. ப்ளே ஸ்டோர், ஆஃப் ஸ்டோரில் இருந்தும் பிரபல வீடியோ ஷேரிங் அப் நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சுமார் 170 மில்லியன் பயனர்களைக் கொண்ட இந்த செயலி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கும் செய்திகளின் ஸ்க்ரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அதில், “மன்னிக்கவும். இனி டிக்டாக் செயலி கிடைக்காது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அதிபர் ட்ரம்ப் பதவியேற்றதும், டிக் டாக் செயலியை மீண்டும் கொண்டுவருவதற்கான தீர்வில் எங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறியிருப்பது எங்களின் அதிர்ஷ்டம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடையை ஒட்டி டிக் டாக் செயலி பயனர்களுக்கு அந்தச் செயலியில் தங்களின் கணக்கை மூடுவதற்கான வசதியை வழங்குகிறது. மேலும் டிக்டாக் இணையத்தில் இருந்து பயனர்கள் தங்களின் தரவுகளை பதிவிறக்கம் செய்யவும் வழிவகை செய்துள்ளது. இந்த செயல்பாட்டுக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் என்று டிக் டாக் தெரிவித்திருந்தது.
முன்னதாக டிக் டாக் நிறுவனம் வெளியிட்டிருந்த வேறொரு செய்தியில் தங்களின் சேவை தற்காலிகமாக கிடைக்காது என்று பயனர்களுக்குத் தெரிவித்திருந்தது. மேலும் அமெரிக்காவில் அதன் சேவையை மீண்டும் துவக்க முடிந்தவரை முயற்சிக்கும் என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே அமெரிக்க உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை, தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியின் தடையை உறுதி செய்தது, சீனாவை சேர்ந்த டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் அதனை விற்பனை செய்யவில்லை என்றால், இரண்டு நாட்களில் அந்த செயலி நீக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க டிக் டாக்கிற்கு 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக சனிக்கிழமை தெரிவித்தார்.