கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை ஆண் காட்டு யானை குடியிருப்புப் பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வேலுமணி என்ற விவசாயி ஊருக்குள் வந்த யானையை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக யானை தள்ளிவிட்டதில் அந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், அதே யானை நேற்று தெற்குபாளையம் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு வட மாநில தொழிலாளர்கள் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள்.
யானை ஊருக்குள் வந்தது தெரியாமல், அவர்கள் கதவை திறந்து வைத்தபடி சமையல் செய்து கொண்டிருந்தனர். யானை திடீரென அவர்களின் வீட்டின் முன்பு வந்து நின்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு அறையின் ஓரத்தில் சென்று பதுங்கியுள்ளனர். தொடர்ந்து யானை தலையை உள்ளே விட்டு அங்கிருந்த ரேஷன் அரிசியை சாப்பிட்டது.
மேலும் சமையல் பொருள்களை இழுத்து வெளியே வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. யானை சென்றுவிட்டது என்று தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த யானை மீண்டும் அங்கு வந்தது.
இந்தமுறை தன்னுடைய பாதி உடலை வீட்டுக்குள் புகுத்த முயற்சித்து, தும்பிக்கையால் உணவுப் பொருள்களை தேடியது. என்ன செய்வதென்று அறியாமல் அந்தத் தொழிலாளர்கள் பையில் வைத்திருந்த ரேஷன் அரிசியை தூக்கி போட்டனர். யானை அதை இழுத்துக் கொண்டு வெளியே சென்றது. பிறகு வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்டினர்.
“ஒற்றை யானை குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்கு செல்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யானையை பார்த்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். நீங்களாக யானையை விரட்டக் கூடாது” என்று வனத்துறை அறிவித்துள்ளது.